ராமநாதபுரம்,நவ.3:-
உலகளவில் உள்ள கடல்களில் இந்திய பெருங்கடல் பெரும் பங்கு வகிக்கிறது. இதில் கட்ச் வளைகுடா, காம்பட் வளைகுடா மற்றும் மன்னார் வளைகுடா ஆகியவை இந்திய பெருங்கடலில் உள்ள முக்கிய மூன்று வளைகுடாக்கள். இவற்றுள் மன்னார் வளைகுடா பல்லுயிரிய செழிப்பிடமாக விளங்குகிறது.
பல்வேறு வகையான வாழிடங்களை கொண்டுள்ளது. மொத்தத்தில் கடல் சார் பாதுகாக்கப்பட்ட பல்லுயிர்களின் புகலிடமாகவும் விளங்குகிறது.
பவளப்பாறைகள்:-
மன்னார் வளைகுடா பகுதிகளில் காணப்படும் பவளப்பாறைகள் கடலில் மலைக்காடுகள் எனவும் அழைக்கப்படுகிறது. இவைகள் ஆழம் குறைந்த கடலின் அடிப்பகுதியில் தொடங்கி கடல் மேல் மட்டம் வரை சுண்ணாம்பினால் (கால்சியம் கார்பனேட்) பாறைகளை உருவாக்கும் திறன் பெற்ற உயிரினங்கள்.
மேல் மட்டத்தில் உள்ளவை மட்டும் உயிருள்ளவையாகவும், அடியில் உள்ளவை உயிரற்ற பாறைகளாகவும் மாறிவிடுகிறது. உயிரின வகைப்பாட்டில் நிடேரியா தொகுதியைச் சார்ந்த பவளப்பாறைகள் அதன் வளர் மாற்றத்தில் பாலிப் என்ற நிலையில் கடல் நீரில் இருக்கும் கால்சியத்தை எடுத்துக்கொண்டு, வளர்ச்சியின் முடிவில் கார்பனேட்டை உருவாக்கி பாறைகளாக மாறி விடுகிறது.
கடினத் தன்மையும் உறுதியையும் கொண்ட இந்த பாறைகளை பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டுமானத்திற்கு பயன்படுத்தியுள்ளனர். அதன் உறுதி தன்மைக்கு சாட்சியாக போஸ்ட் ஆபீஸ், சர்ச், ரயில்வே ஸ்டேஷன் கட்டடங்களாக சிதைவடையாமல் இன்னும் தனுஷ்கோடியில் எஞ்சி நிற்கிறது.
கடல் பாசிகள்:-
மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பவளப்பாறைகளை போன்று கடல் பாசிகளும் முக்கியத்துவம் வாய்ந்தது. கட்டக்கோரை, பக்கோடா, மரிக்கொழுந்து, சர்க்காசம், ஸ்பைருலினா சுருள் பாசி, அகர் அகர் கிராஸிலேரியா போன்றவைகள் மருந்துக்காகவும், அழகு சாதனப்பொருள் தயாரிப்பிலும், செறிவுமிகு புரத உணவு மற்றும் கால்நடைக்கு தீவனங்களுக்காகவும் அறுவடை செய்யப்படுகின்றன.
கடல்பாசி வளர்ப்பு, சேகரிப்பு மீனவ பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வாழ்வாதாரம் உயர்வதற்கு வருமானம் தரக்கூடிய தொழிலாக இருந்து வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் வாழும் மக்கள் தொகையில் இரண்டரை லட்சம் பேர் கடல் தொழிலையே நம்பி உள்ளனர்.
மக்களின் உணவுத் தேவைக்காக மீன்பிடித் தொழிலை முக்கியமாக கொண்டு வாழ்கின்றனர். மக்கள் தொகை பெருக்கத்தாலும், தேவை அதிகரிப்பதாலும் மீன்பிடிக்கும் முறைகளில் மாற்றம், உற்பத்திக்கு மீறிய அறுவடை, தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துதல், வெடிவைத்து மீன்பிடிப்பது போன்ற செயல்பாடுகளால் பவளப்பாறைகளும் பல்லுயிர் தன்மையும் பாதிப்படைகின்றன.
அழியும் தருவாயில் உள்ள ஆவுலியா மற்றும் டால்பின்கள் போன்றவைகளை பாதுகாக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. மன்னார் வளைகுடா உயிர்க்கோளப் பாதுகாப்பு என்பது ஒரு கூட்டு முயற்சியாகும். இந்த முயற்சியில் மக்களின் பங்கு அவசியம். அது சார்ந்த மன்னர் வளைகுடா உயிர்க்கோளக் காப்பகமும் அமைப்பு சாரா தொண்டு நிறுவனங்களும் இணைந்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன.
தேசிய கடல் பூங்கா:-
மன்னார் வளைகுடா கடல் தேசிய பூங்காவில் 21 தீவுகள் உள்ளன. இங்கு உள்ளூர் பங்களிப்புடன் குருசடை தீவு படகு பயணம், தருவைக்குளம் கண்ணாடி இழை படகு, சுற்றுலா மற்றும் காரங்காட்டில் சதுப்பு நில மாங்குரோவ் காடுகள் சுற்றுலா, ஏர்வாடியில் பவளப்பாறை சுற்றுலா போன்றவை மன்னார் வளைகுடா உயிர்க்கோளக் காப்பகம் சிறப்பாக செய்து வருவதால் இத்திட்டத்தை பாராட்டி ஜப்பான் நாட்டின் சுற்றுலாத்துறை விருது வழங்கிய கவுரவித்திருக்கிறது.
கடற்பரப்பில் உள்ள உயிரிய பல்வகை தன்மையை பாதுகாத்தல், மேலாண்மை செய்தல், மேலும் தகுந்த முறையில் பயன்படுத்தினால் மட்டுமே இயற்கை கொடுத்த கடல்வளக் கொடையை அடுத்த தலைமுறைக்கு நாம் பத்திரப்படுத்தி வைக்க முடியும்.