தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம்(தெற்கு)மாவட்டம் சார்பில் இன்று மாலை 4.30 மணியளவில் இராமநாதபுரம் ஹாஜாமஹாலில் வக்ஃப் திருத்த சட்டத்தை கண்டித்து நடைபெறும் ஆர்ப்பாட்டம் மற்றும் அழகிய முன்மாதிரி இப்ராஹிம்(அலை) செயல்திட்ட பணிகளை வீரியப்படுத்தும் வகையில் செயல்வீரர்கள்& செயல்வீராங்கனைகள் கூட்டம் நடைபெற்றது.
300-க்கும் மேற்பட்ட செயல்வீரர்கள் மற்றும் செயல் வீராங்கனைகள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சிக்கு மாவட்டத்தலைவர் ஐ.எஸ்.இப்ராஹிம் சாபிர் தலைமை தாங்கினார்.மாவட்ட துணைத்தலைவர் யாசர் அரஃபாத்,மாவட்ட துணைச்செயலாளர்கள் உஸ்மான்,மீரான்,பாருக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாநில செயலாளர் செங்கோட்டை பைசல் செயல் திட்டங்களை குறித்து சிறப்புரையாற்றினார்.
மாவட்ட செயலாளர் எம்.தினாஜ்கான் வருகின்ற 11.11.24 அன்று இராமநாதபுரத்தில் நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்தின் செயல்திட்டங்களை தொகுத்து வழங்கியதுடன் செயல்திட்டத்தின் இறுதியாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம்(தெற்கு)மாவட்டம் 2025 பிப்ரவரி 2 அன்று நடத்த உள்ள தவ்ஹீத் முழக்க மாநாட்டின் செயல்திட்டங்களை வீரியமாக்குமாறும் வலியுறுத்தி முடிவில் நன்றியுரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட செயல்வீரர்கள் & செயல்வீராங்கனைகள் அனைவரும் ஆர்ப்பாட்ட செயல்திட்டங்களை செயல்படுத்தும் வகையிலும் மாநாட்டை வெற்றிப்பெற செய்யும் வகையிலும் புத்துணர்வுடன் திரும்பிச்சென்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் கீழ்க்கண்ட 4 தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
1.உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் கருத்து:-
ஓய்வு பெற உள்ள உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி DY சந்திரசூட்டின் பாபர் மசூதி தீர்ப்பு தொடர்பான சமீபத்திய கருத்து பெரும் அதிர்ச்சியை மக்களின் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது, சட்டத்தின் படி ஆவணங்களின் படி வழங்க வேண்டிய தீர்ப்புக்கான தீர்வை கடவுளிடம் இருந்து பெற்றேன் என்று சொல்வது இந்திய நீதி பரிபாலனத்தை உலகம் எள்ளி நகையாடக்கூடிய சூழலை உருவாக்கி உள்ளது என இந்த கூட்டத்தின் வாயிலாக எடுத்துரைக்கப்பட்டது.
2.வக்ஃப் வாரிய சட்ட திருத்த மசோதா:-
வக்ஃப் வாரிய சட்டத்தில் 44 திருத்தங்களை செய்வதற்கு ஒன்றிய மைனாரிட்டி பாஜக அரசு முயற்சிக்கிறது,வக்ஃப் வாரியத்தை முழுமையாக செயலிழக்க செய்து இஸ்லாமியர்களின் சொத்துக்களை அபகரிக்கும் பணியை இம்மசோதாவின் மூலம் அரங்கேற்ற நினைக்கும் ஒன்றிய மைனாரிட்டி பாஜக அரசை இந்த கூட்டத்தின் வாயிலாக வன்மையாக கண்டிக்கின்றோம்.இதற்காக அமைக்கப்பட்டுள்ள கூட்டு பாராளுமன்றக் குழுவின் பரிந்துரைகள் இஸ்லாமியர்களின் சொத்துக்களையும் பாதுகாக்கும் வகையில் அமைய வேண்டும் என இந்த கூட்டத்தின் வாயிலாக கேட்டுக்கொள்ளப்பட்டது.
3.இஸ்ரேலின் அராஜகங்கள்:-
கடந்த அக்டோபர் 7-ம் தேதி தொடங்கப்பட்ட பாலஸ்தீனியர்களுக்கெதிரான இன அழிப்பில் இதுவரை சுமார் 42000 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர், தற்போது லெபனானிலும் மேற்கு கரை மற்றும் காஸாவில் உள்ள அகதிகள் முகாம் மீதும் கொடூர தாக்குதல்களை நடத்தி நூற்றுக்கணக்கனவர்களை கொன்று குவித்து வருகின்றனர் குழந்தைகளை குறிபார்த்து சுடும் அராஜகமும் நடைபெற்று கொண்டு உள்ளது.இப்படிப்பட்ட அக்கிரமங்களை அரங்கேற்றும் ஜியோனிஸ பயங்கரவாதிகளை இக்கூட்டத்தின் வாயிலாக வன்மையாக கண்டிக்கின்றோம்.மேலும் அமெரிக்க, ரஷ்ய நாடுகளின் நன்மைகளை உறுதி செய்யும் போராக இது மாறிவிடாமல் பாலஸ்தீன மக்களுக்கான நீதி கிடைப்பதில் காந்தி பிறந்த இந்த இந்தியா பொறுப்புடன் செயல்பட வேண்டும் என இக்கூட்டத்தின் வாயிலாக வலியுறுத்தப்பட்டது.
4.அழகிய முன்மாதிரி இப்ராஹிம் (அலை):-
திருமறைக் குர்ஆனில் மனித குலத்திற்கு அழகிய முன்மாதிரி என்று கூறப்பட்டுள்ள நபி இப்ராஹிம் (அலை) அவர்களின் வரலாற்றையும்,வாழக்கை செய்தியையும் மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் வகையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பாக 10 மாத கால தொடர் பிரச்சாரத்தை மிகச்சிறப்பாக செய்வது என இந்த கூட்டத்தின் வாயிலாக உறுதி ஏற்கப்பட்டது.