வேதாளை தபால்நிலைய தரம் பறிப்பு பூர்வீக குடிமக்களை அகதிகள் என சந்தேகிப்பதா?-எஸ்.டி.பி.ஐ கட்சி கடும் கண்டனம்!!! 

ராமநாதபுரம் மாவட்டம் வேதாளை ஊராட்சியில் பறிக்கப்பட்ட  தபால் நிலைய தரத்தை (GDS  SO) திருப்பி‌ கொடுக்க‌ வேண்டும் 623804 என்ற தனி அஞ்சல் குறியீட்டை வேதாளை மக்களுக்கு மீண்டும் வழங்க வேண்டும் என எஸ்.டி.பி.ஐ கட்சி ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட தலைவர் பெரியபட்டினம் ரியாஸ்கான் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக‌ எஸ்.டி.பி.ஐ கட்சியின் ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட தலைவர் பெரியபட்டினம் ரியாஸ்கான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியத்தில் வேதாளை கிராமம்  என்பது மிகவும் பழைமையான பல நூற்றாண்டு பாரம்பரியமிக்க கிராமம் ஆகும். இந்த கிராமத்தில் சிறுபான்மை சமுதாய மக்களும் வாழ்ந்து,மீனவர்களும் பெரும்பான்மையாக வாழ்ந்து வருகினறனர்.

சுமார் 20,000 மக்கள் தொகையை கொண்ட இந்த ஊராட்சியில் 6000 வாக்காளர்கள் உள்ளனர்.பல ஆண்டுகளாக 623804 என்ற அஞ்சல் குறியீட்டை கொண்ட இந்த ஊராட்சியின் தபால் நிலையம் GDS SO என்ற தரமுடைய தனி அஞ்சல் அலுவலகமாக செயல்பட்டு வந்தது. கிராம மக்களிடம் எந்த வித கருத்தும் கேட்கப்படாமல் திடீரென அஞ்சல் துறையினர் கடந்த 2010 ம் ஆண்டு இந்த தபால் நிலையத்தின் தரத்தை (GDS BO) என குறைத்து, 623519 என்ற அருகிலுள்ள மண்டபம் முகாமின் பகுதி நேர அலுவலகமாக இவ்வலுவலகத்தை மாற்றியுள்ளார்கள்.

இந்த கிராமத்தின் பெரும்பான்மை மக்கள் தங்களது வாழ்வாதாரத்திற்காக‌ வலைகுடா நாடுகளுக்கு சென்று வேலை செய்து வரும் நிலையில்,அவர்களின் பாஸ்போர்ட் புதுப்பித்தல் போன்ற தேவைக்காக செல்லும்போது முகவரி மற்றும் இருப்பிட சரிபார்ப்புகளில் குழப்பம் ஏற்படுகிறது.

அருகிலுள்ள மண்டபம் முகாமில் இலங்கை அகதிகள் வாழ்ந்து வருவதால் அதே அஞ்சல் குறியீட்டை வேதாளை மக்களும் பயன்படுத்தும் சூழல் உள்ளதால்,பாஸ்போர்ட் சரிபார்ப்பில் வேதாளை மக்களை இலங்கை அகதிகளா? என சந்தேகித்து பாஸ்போர்ட் நிறுத்தி வைக்கப்படுகிறது.

எனவே இந்த விவகாரத்தில் நாடாளுமன்ற உறுப்பினரும் , தமிழக அரசு,அஞ்சல் அதிகாரிகளும் தலையிட்டு வேதாளை மக்களின் பழைய அஞ்சல் குறியீடான 623804 என்ற குறியீட்டை பெற்றுத்தர ஒன்றிய அரசிடம் வலியுறுத்தி மீண்டும் GDS SO என்ற தரத்தில் அஞ்சல் அலுவலகம்‌ அமைய தீர்வு ஏற்படுத்தி தர வேண்டும் ” என கேட்டு கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *