கீழக்கரை : கீழக்கரையில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட மலேரியா கிளினிக் தற்போது சேதமடைந்த நிலையில் உள்ளது.
மலேரியா மற்றும் டெங்கு நோய் பரப்பும் கொசுக்கள், லார்வா புழுக்கள் உற்பத்தியை கண்டறிதல், பாதிக்கப்பட்ட நோயாளிகளின் ரத்த மாதிரி பரிசோதனை கூடம் மற்றும் கீழக்கரை சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராமங்களில் நோயாளிகளின் வருகையை கண்காணித்தல் உள்ளிட்ட அலுவலகம் இங்கு செயல்படுகிறது. கீழக்கரை மலேரியா கிளினிக் 200 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது.
கட்டடத்தின் சுவர்கள் கடல் பாறைகளாலும், சுண்ணாம்பு பூச்சு கலவையால் பழமையான முறையில் கட்டப்பட்டுள்ளது. கட்டடத்தின் மேல் பகுதி முழுவதும் மர உத்தரங்களால் உள்ளது.
மலேரியா கிளினிக்கின் மேற்பகுதி முழுவதும் ஆலமரம், அரசமரம், வேம்பு உள்ளிட்ட மரங்கள் செழித்து வளர்ந்து வருகிறது.
இதனால் அவற்றின் வேர் கட்டடத்தில் ஊடுருவி கட்டடத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. இங்கு சுகாதார மேற்பார்வையாளர், அலுவலர்கள் என 4 பேர் பணிபுரிகின்றனர். சிகிச்சை அளிக்கப்பட வேண்டிய நிலையில் மலேரியா கிளினிக் கட்டடம் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட இக்கட்டத்தின் உறுதி தன்மையை ஆராய்ந்து கட்டடத்தின் மேல் வளர்ந்துள்ள மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என நோயாளிகள் கோரிக்கை விடுத்தனர்.