ராமநாதபுரம்,நவ.3:-
ராமநாதபுரம் ரயில்நிலையத்தில் முதல் பிளாட்பாரத்தில் இருந்து 2-வது பிளாட்பாரத்திற்கு செல்வதற்கு ஆபத்தான முறையில் தண்டவாளத்தை கடந்து இறங்கி, ஏறிச்செல்லும் பயணிகளுக்கு விபத்து அபாயம் உள்ளது. இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ரயில்வே நிர்வாகம் முன்வர வேண்டும்.
ராமநாதபுரம் ரயில் நிலையம் வழியாக ராமேஸ்வரத்திற்கு சென்னையில் இருந்து சேது எக்ஸ்பிரஸ் மற்றும் மதுரையிலிருந்து எக்ஸ்பிரஸ் ரயில்கள் தினமும் இயக்கப்படுகிறது.இதுபோக வாராந்திர ரயில்களாக திருப்பதி, வாரணாசி, செகந்திரபாத், ராஜஸ்தான் ஹஜ்மீர், அயோத்தி, பனரஸ் ஆகிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் காரைக்குடி, மானாமதுரை வழியாக ராமேஸ்வரத்திற்கு இயக்கப்படுகின்றன.
ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் ஒரு பிளாட்பாரத்தில் இருந்து மற்றொரு பிளாட்பாரம் செல்வதற்கு 10 நிமிடங்கள் வரை ஆகும்.
இதை தவிர்ப்பதற்காகவும், தாமதமாக வரும் பயணிகள் ரயிலை பிடிக்க ஆபத்தை உணராமல் பிளாட்பாரம் தண்டவாளப்பாதையில் இறங்கி, ஏறிச்செல்வது வாடிக்கையாகியுள்ளது.
அப்போது பயணிகள் குறிப்பாக வயதானவர்கள், பெண்கள் தவறி விழுந்து விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே ரயில்வே விதிகளை மீறி ஆபத்தான முறையில் தண்டவாளத்தை கடந்து பிளாட்பாரத்திற்கு செல்லும் பயணிகளை கண்காணித்து அவர்களை எச்சரிக்கவும், விபத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதற்கு ரயில்வே அதிகாரிகள் உத்தரவிட வேண்டும்.