ராமநாதபுரம் மாவட்டத்தில் பகுதிகளில் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர்கள் பார்வையிட்டு ஆய்வு!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்,மாண்புமிகு பால்வளத்துறை மற்றும் கதர்த்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வின்போது மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்,பால்வளத்துறை மற்றும் கதர்த்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் ஆகியோர் ராமநாதபுரம் நகராட்சிக்குட்பட்ட தங்கப்பா நகர் பகுதியில் மழை தண்ணீர் தேங்கியுள்ளதை நகராட்சி நிர்வாகம் மூலம் வெளியேற்றப்பட்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவிக்கையில்:-

தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க நானும் பால்வளத்துறை மற்றும் கதர்த்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பனும் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகை தந்து தொடர் மழையால் தண்ணீர் தேங்கி பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு வருகிறோம்.கடந்த 2 நாட்களில் அதிகளவு மழை பொழிந்தது.இந்நிலையில் ஒவ்வொரு நாளும் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோரை தொடர்பு கொண்டு அவ்வப்போது ஏற்படும் நிலவரம் குறித்து கேட்டறிந்ததுடன் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களில் 13 சென்டி மீட்டர் மழை பொழிந்தது.ராமேஸ்வரம்,மண்டபம், ராமநாதபுரம்,பாம்பன் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவு மழை பொழிந்தது.இதனால் ராமநாதபுரம் நகராட்சியில் மட்டும் 30 இடங்களில் பொதுமக்கள் வசிப்பிடங்களில் தண்ணீர் தேங்கியதை உடனடி நடவடிக்கையால் 22 இடங்களில் உள்ள மழை நீர் அகற்றப்பட்டுள்ளது. மேலும் 8 இடங்களில் மழை நீர் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியானது இன்று முடிக்கப்படும்.

தமிழ்நாடு முதலமைச்சர் என்னிடமும் பால்வளத்துறை மற்றும் கதர்த்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பனிடமும் தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவுறுத்தினார்.நாங்களும் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் ஆகியோரிடம் கலந்து ஆலோசித்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேவையான நிவாரணங்கள் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இதுபோல் ராமநாதபுரம் மாவட்டத்தில் வரும் காலங்களில் ராமநாதபுரம் நகராட்சியில் மழைநீர் தேங்காத வண்ணம் பாதாள சாக்கடைகள் அமைத்து கழிவுநீர் அகற்றி விடப்படும்.மேலும் ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து உடனடியாக மாவட்ட நிர்வாகம் மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்தார்.அதனைத்தொடர்ந்து மண்டபம் பேரூராட்சி,மேற்கு வாடி கடற்கரை பகுதியில் கடல் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட படகுகளை பார்வையிட்டார்.பாம்பன் ஊராட்சி முந்தல்முனை பகுதியில் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்திருப்பதை பார்வையிட்டதுடன்,ராமேஸ்வரம் நகராட்சி ஓலைக்குடா பகுதியில் கடல் சீற்றத்தால் கடல் அரிப்பு ஏற்பட்டு சேதமடைந்த சாலையை பார்வையிட்டு ஆய்வு செய்து தெரிவிக்கையில்:-

கடந்த 2 நாட்களாக மிக கனமழை பெய்த நிலையில் மண்டபத்தில் மேக வெடிப்பு காரணமாக ஒரே நாளில் 31 சென்டி மீட்டர் மழை பொழிந்தது. இதனால் கடல் சீற்றத்தின் காரணமாக அதிவேக காற்றின் பாதிப்பால் மண்டபம் பேரூராட்சி,மேற்குவாடி கடற்கரை பகுதியில் 7 மீன்பிடி விசைப்படகுகள் மிகவும் பாதிப்படைந்துள்ளது.அவர்களுக்கு ரூ.2 இலட்சம் மீன்வளத்துறையின் மூலம் வழங்கவுள்ள நிலையில் பராமரிப்புத்தொகை உயர்த்தித்தர வேண்டி மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.மீனவர்களின் கோரிக்கையினை தமிழ்நாடு முதலமைச்சரிடம் நேரில் சென்று கோரிக்கைகளை தெரிவித்து உரிய இழப்பீடு தொகை உயர்த்தி தர வேண்டி மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளார்.மீனவர்களின் கோரிக்கையினை தமிழ்நாடு முதலமைச்சரிடம் நேரில் சென்று கோரிக்கைகளை தெரிவித்து உரிய இழப்பீடு பெற்றுத்தரப்படும். அதேபோல் இப்பகுதியில் ரூ.25 கோடி மதிப்பீட்டில் தூண்டில் வலை அமைக்க நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் இப்பணி முழுமையாக முடிப்பதற்கு மேலும் ரூ.40 கோடி தேவைப்படுவதாக தெரிவித்துள்ளார்கள்.அதுமட்டுமின்றி பகுதியில் தூண்டில் வலை அமைத்தால் மட்டும்தான் போட்டுகள் பாதிப்படையாமல் பாதுகாக்க முடியும் என தெரிவித்துள்ளதையொட்டி கோரிக்கையினையும் தமிழ்நாடு முதலமைச்சரிடம் நேரில் பேசி இப்பகுதியில் தூண்டில் வலை அமைக்கப்படும்.பொதுவாக தமிழ்நாடு முதலமைச்சர் மக்களின் துயரத்தை உடனடியாக நீக்க வேண்டும் என்ற அக்கறையுடன் செயல்படக்கூடியவர். அதற்கேற்ப மக்களுடைய தேவையினை கவனத்தில் கொண்டு சென்று கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்.பகுதியில் தொடர் மழையால் தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளில் மக்களை பாதுகாப்பாக முகாமில் தங்க வைத்திடும் வகையில் 5 முகாம்கள் அமைத்து அதில் 216 பேர் தங்கியுள்ளார்கள்.அவர்களுக்கு தேவையான உணவு, உடை உள்ளிட்ட அத்தியாவசியப்பொருட்கள் வழங்கி வருவதுடன் தேவையான மருத்துவ முகாம்களும் நடத்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி பாதிக்கப்பட்ட இடங்கள் என கண்டறியப்பட்ட பகுதிகளில் 44 மருத்துவ முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்டதுடன் மேலும் தொடர்ந்து மருத்துவ முகாம்கள் தேவைக்கேற்ப நடத்தப்படும்.அதேபோல் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை வேளாண்மைத்துறையின் மூலம் ஆய்வு செய்து இழப்பீடுகளுக்கான உரிய நிவாரணம் விவசாயிகளுக்கு வழங்கப்படும்.இதேபோல் வீடு இழந்தவர்களுக்கும், மற்ற பொருட்சேதங்களுக்கும் உரிய நிவாரணம் வழங்கப்படும். அதேபோல் ஒலைக்குடா பகுதியில் சாலையோரம் கடல் அரிப்பை தடுக்க தடுப்புச்சுவர் அமைப்பதற்கான பணிகளும் மேற்கொள்ளப்படும்.தமிழ்நாடு முதலமைச்சரிடம் ஆய்வு மேற்கொண்ட விபரம் குறித்து நேரில் பேசி பாதித்தவர்களுக்கான இழப்பீடுகளை தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதல் படி வழங்கப்படுமென வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்தார்.இந்த ஆய்வின்போது ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ்கனி,ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம்,பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் செ.முருகேசன்,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.சந்தீஷ்,மாவட்ட வருவாய் அலுவலர் இரா.கோவிந்தராஜலு,கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) வீர் பிரதாப் சிங்,உதவி ஆட்சியர் (பயிற்சி) முகமது இர்பான்,ராமநாதபுரம் நகர் மன்றத்தலைவர் ஆர்.கே.கார்மேகம்,ராமநாதபுரம் மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் வேலுச்சாமி,ராமநாதபுரம் நகர் மன்ற துணைத்தலைவர் டி.ஆர்.பிரவீன் தங்கம்,ராமேஸ்வரம் நகர்மன்ற துணைத்தலைவர் தெட்சிணாமூர்த்தி, ராமநாதபுரம் நகராட்சி ஆணையர் அஜிதா பர்வீன்,ராமேஸ்வரம் நகராட்சி ஆணையர் கண்ணன்,ராமேஸ்வரம் நகராட்சி பொறியாளர் பாண்டீஸ்வரி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *