ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சார்பில் ஏணி சின்னத்தில் போட்டியிட்ட அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் நவாஸ் கனி 2-வது முறையாக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
அதனைத் தொடர்ந்து ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தனக்கு வாக்களித்து வெற்றியை தேடித்தந்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார்.அதன் ஒரு பகுதியாக கீழக்கரை நகர் பகுதியில் ராமநாதபுரம் தி.மு.க மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ தலைமையில், கீழக்கரை தி.மு.க நகர் இளைஞரணி அமைப்பாளரும்,கீழக்கரை நகரசபை துணைத்தலைவருமான வழக்கறிஞர் வி.எஸ்.ஹமீது சுல்தான் ஏற்பாட்டில் வாக்காளர்களை சந்தித்து நன்றி தெரிவித்தார்.
இந்நிகழ்வில் இந்தியா கூட்டணி கட்சியைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
முன்னதாக 2-வது முறையாக வெற்றி நவாஸ் கனி எம்.பி-க்கும்,கடுமையான உழைப்பினால் அவரை வெற்றிபெறச் செய்த ராமநாதபுரம் தி.மு.க மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ-வுக்கும் கீழக்கரை தி.மு.க நகர் இளைஞரணி அமைப்பாளரும், நகரசபை துணைத்தலைவருமான வழக்கறிஞர் வி.எஸ்.ஹமீது சுல்தான் வீரவாளை வெற்றியின் அடையாளமாக பரிசளித்து உற்சாகப்படுத்தினார்.