ராமநாதபுரம்,நவ.18:-
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் இன்று (18.11.2024) மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன்,தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கைகள் குறித்த 326 மனுக்கள் பெற்று மனுதாரரின் முன்னிலையில் மனுக்களை விசாரணை செய்து தொடர்புடைய அலுவலர்களிடம் மனுக்களை வழங்கி உரிய நடவடிக்கையினை விரைந்து மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இக்கூட்டத்தில் வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, தனிநபர் வீடு வழங்கும் திட்டம், குடிநீர் இணைப்பு வழங்குதல் உள்ளிட்டவை தொடர்பாக பொதுமக்கள் மனுக்களை அளித்தனர். மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில், ஒவ்வொரு வாரமும் பொதுமக்களிடம் பெறக்கூடிய மனுக்களுக்கு உரிய நடவடிக்கை மேற்கொண்டு ஒருமாத காலத்திற்குள் மனுதாரர்களுக்கு உரிய தீர்வு வழங்கிட வேண்டும் எனவும், தீர்வு வழங்க முடியாத மனுக்கள் நிலை குறித்து மனுதாரர்களிடம் அலுவலர்கள் எடுத்துரைக்க வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும் பொதுமக்கள் வழங்கும் மனுக்களுக்கு துறைசார்ந்த அலுவலர்கள் சிறப்பு கவனம் எடுத்து செயல்பட வேண்டுமென மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்தார்.
தொடர்ந்து இக்கூட்டத்தில் முதுகுளத்தூர் வட்டத்தைச் சார்ந்த, பாம்பு கடித்து இறந்த 03 நபர்களின் வாரிசுதாரர்களுக்கு தலா ரூ.1,00,000/- வீதம் மொத்தம் ரூ.3,00,000/-த்திற்கான காசோலையினையும் மற்றும் இராமநாதபுரம் வட்டத்தைச் சார்ந்த, கடலில் தவறி விழுந்து நீரில் மூழ்கி இறந்த 01 நபரின் வாரிசுதாரருக்கு ரூ.1,00,000/-த்திற்கான காசோலையினையும் மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.கோவிந்தராஜலு,சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் தனலெட்சுமி,மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் செல்வி,கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) தமிழரசி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.