விதைப்பண்ணை அமைத்தால் விவசாயிகளுக்கு கூடுதல் லாபம்-வேளாண் அதிகாரி தகவல்!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பு பருவத்தில் வேளாண் பணிகள் தொடங்கியுள்ளது.ஆகவே விவசாயிகளுக்குத் தேவையான விதைகளை உற்பத்தி செய்வதற்கு அனைத்து வட்டாரங்களிலும் விதைப்பண்ணைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.மாவட்டத்தில் விவசாயிகளின் தேவையை கருத்தில் கொண்டு நெல் விதையின் உற்பத்தியை அதிகரிக்க நடப்பு ஆண்டில் திட்டமிடப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் நெல் விதைப்பண்ணை அமைப்பதற்கு தேவையான வல்லுநர் விதை, ஆதாரநிலை மற்றும் சான்றுநிலை விதைகளான கோ 51, கோ 55, ஏடிடீ 45, ஏடிடீ 53, 54 போன்ற குறுகிய கால விதை இரகங்கள் மற்றும் டிகேஎம் 13, பிபிடி 5204, ஆர் என் ஆர் 15048 மற்றும் என் எல் ஆர் 34449 போன்ற மத்திய கால விதை இரகங்களை தேர்வு செய்யலாம்.விதைகளின் விற்பனை ரசீது மற்றும் சான்றட்டைகள் ஆகியவற்றை விதைப்பறிக்கையுடன் இணைத்து சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்கள் மூலமாக விதைப்பண்ணைகளை பதிவு செய்திடல் வேண்டும்.

விதைப்பண்ணை அமைக்க விதைச்சான்று கட்டணமாக ஒரு ஏக்கருக்கு ஒரு விதைப்பு அறிக்கைக்கு பதிவுக்கட்டணம் ரூ.25/-ம் வயலாய்வு கட்டணமாக ஒரு ஏக்கருக்கு ரூ.100/-ம் விதை பரிசோதனைக் கட்டணமாக ரூ.80/-ம் செலுத்த வேண்டும். விதைத்த 35ம் நாள் அல்லது பயிர் பூப்பதற்கு 15 நாட்கள் முன்பு இதில் எது முன்னதோ அதற்குள் பதிவு செய்ய வேண்டும். விதைப்பண்ணையில் இரு வேறு பகுதிகள் 50 மீட்டர்களுக்கு அதிக இடைவெளியில் இருந்தாலோ, விதைப்பு நாள் 7 நாட்களுக்கு மேல் வித்தியாசப்பட்டாலோ தனித்தனியே பதிவு செய்ய வேண்டும்.

பதிவு செய்த விதைப்பண்ணைகள் விதைச் சான்று அலுவலர்களால் உரிய காலங்களில் வயலாய்வு மேற்கொள்ளப்பட்டு கலவன்கள் அகற்றப்பட்டு, பயிரின் வளர்ச்சி கண்காணிக்கப்படுவதால் தரமான விதை உற்பத்தி செய்யப்படுகிறது.

இவ்வாறு கலவனற்ற,இனத்தூய்மை உள்ள விதைப்பண்ணைகளிலிருந்து கொள்முதல் செய்யப்படும் விதைகளுக்கு கொள்முதல் மற்றும் விற்பனை மானியம் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. எனவே, இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி நெல் விதைப்பண்ணை அமைக்க உள்ள விவசாயிகள் கூடுதல் லாபம் பெறலாம்.இது தவிர சிறுதானியங்களான குதிரைவாலி, கேழ்வரகு, கம்பு, வரகு, சாமை, பயறுவகைகளான உளுந்து, பாசிப்பயறு மற்றும் எண்ணெய் வித்துப்பயிர்களில் நிலக்கடலை, எள் ஆகிய இரகங்களில் விதைப்பண்ணை அமைக்க இருக்கும் விவசாயிகளும் விண்ணப்பிக்கலாம் என ராமநாதபுரம் விதைச்சான்றளிப்பு மற்றும் உயிர்மச் சான்றளிப்பு உதவி இயக்குநர் சி.சிவகாமி கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *