ராமநாதபுரம் நகராட்சி பகுதியில் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் எம்.எல்.ஏ,மாவட்ட ஆட்சியர் ஆய்வு!!!

ராமநாதபுரம் நகராட்சி பகுதியில் இன்று (21.11.2024) ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் அவர்கள் முன்னிலையில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தொடர் மழையின் காரணமாக மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் ஆகியோர் ராமநாதபுரம் நகராட்சிக்குட்பட்ட தங்கப்பா நகர்,மாரியம்மன் கோவில் தெரு,பாத்திமா நகர்,பெரியார் நகர் அருகாமையில் உள்ள மதுரை ரோடு தேசிய நெடுஞ்சாலை பகுதியில் அதிகளவு மழை நீர் தேங்கியுள்ள இடங்களை ஆய்வு செய்ததுடன் நகராட்சி நிர்வாகம் மூலம் மோட்டார் வைத்து மழை நீர் அகற்றும் பணி நடைபெறுவதை பார்வையிட்டத்துடன் மழைநீர் வடிகால் வாய்க்கால் மூலம் மழை நீர் தேங்காமல் செல்லும் வகையில் உடனடியாக சீரமைத்து பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் கண்காணித்திட வேண்டுமென நகராட்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள். மேலும் மதுரை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் தேசிய நெடுஞ்சாலைத்துறை பராமரிப்பில் உள்ள பாலம் பழுதாக உள்ளதன் மூலம் சாலையில் தண்ணீர் தேங்குவதால் உடனடியாக நெடுஞ்சாலைத்துறையின் மூலம் பாலத்தை சரி செய்திட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் அறிவுறுத்தினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்:-

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு வார காலமாக மிதமான மழை பெய்து வந்த நிலையில் நேற்று அதிகளவு மழை பெய்துள்ளது. இதில் ராமேஸ்வரத்தில் 43 சென்டி மீட்டரும்,தங்கச்சிமடத்தில் 33 சென்டி மீட்டரும்,பாம்பனில் 27 சென்டி மீட்டரும்,ராமநாதபுரத்தில் 12 சென்டி மீட்டரும்,ஒரே நாளில் மழை பெய்தது. நேற்று இரவு மழையின் வேகம் குறைந்தது. தற்பொழுது ராமநாதபுரம்,ராமேஸ்வரம்,பாம்பன் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து கொண்டிருக்கிறது.அதிலும் ராமநாதபுரத்தில் அதிகமாக மழை பெய்துள்ளது.இதற்கேற்ப முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்துத்துறை அலுவலர்களும் அந்தந்த பகுதிகளில் முகாமிட்டு மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்றைய தினம் அதிகளவு மழை பெய்ததையொட்டி சக்கரக்கோட்டை, மண்டபம்,பாம்பன் பகுதிகளில் 3 தங்கும் பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டு 150-க்கும் மேற்பட்ட நபர்கள் பாதுகாப்புடன் வரவழைக்கப்பட்டடு அவர்களுக்கான உணவுகள் வழங்கியதுடன்,மருத்துவ முகாம்கள் அமைத்து மருத்துவ சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது.

பின்னர் தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளில் மழைநீர் அகற்றுவதற்கு தேவையான பணிகள் நடைபெற்று வருகிறது.அது மட்டுமின்றி பாதிக்கப்பட்ட சாலைகள் மற்றும் காற்றில் சாய்ந்த மரங்கள் ஆகியவை அகற்றுவதற்கு ஏற்ப ஜேசிபி வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்துத்துறை அலுவலர்களும் தேவையான மீட்பு பணிகளை மேற்கொள்ள தயார் நிலையில் உள்ளார்கள்.அதேபோல் பொதுமக்களுக்கு பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி வழங்கப்பட்டு வருகிறது. மேலும் வேளாண்மைத்துறையின் மூலம் அதிக மழை உள்ள பகுதிகளை கண்காணித்து விவசாயிகளுக்கான வழிகாட்டுதலை மேற்கொள்வார்கள்.அதேபோல் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் மூலம் தடையின்றி மின்சாரம் வழங்கவும், பழுது ஏற்படும் மின்மாற்றிகளை சரி செய்யவும், மின்கம்பங்கள் சாய்ந்தால் உடனடியாக சரி செய்திடும் அளவிற்கு பணியாளர்கள் நியமித்து கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுவாக மாவட்டத்தில் தொடர் மழையின் காரணமாக எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் பணிகள் முழுமையாக கண்காணித்து மேற்கொள்ளப்பட்டுவரும் என மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்தார்.

இந்த ஆய்வில் ராமநாதபுரம் நகர் மன்றத்தலைவர் ஆர்.கே.கார்மேகம்,ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் கே.டி.பிரபாகரன்,ராமநாதபுரம் நகர் மன்ற துணைத்தலைவர் டி.ஆர்.பிரவீன் தங்கம்,ராமநாதபுரம் நகராட்சி ஆணையர் அஜிதா பர்வீன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *