தேசிய கல்விக்கொள்கையை ஏற்காததால் சம்பளத்தை நிறுத்தி ஆசிரியர்களை ஒன்றிய அரசு வஞ்சிக்கிறது-தி.மு.க மாநில மாணவரணி தலைவர் தாக்கு!!!

தேசிய கல்விக்கொள்கையை ஏற்காததால்  சம்பளத்தை நிறுத்தம் செய்து ஆசிரியர்களை ஒன்றிய அரசு வஞ்சிப்பதாக தி.மு.க மாநில மாணவரணி தலைவரும்,பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினருமான தேர்போகி ராஜீவ் காந்தி கூறினார்.

இது குறித்து அவர் தேர்போகி கிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நாட்டிலேயே கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளித்த மாநிலம் தமிழ்நாடு. சுயமரியாதை இயக்கம் துவங்கியதன் கொள்கையே கல்வி அனைவருக்கும் வேண்டும் என்பதே. நீதிக்கட்சி,சுயமரியாதை இயக்கம் இணைந்து போராடியதால் தான்  அனைத்து வீடுகளிலும் இன்று பட்டதாரிகள் என்ற நிலை  உள்ளது.  திராவிட இயக்கம் கல்விக்கு முக்கியத்துவம் பொருட்டு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பின்,பெண் கல்வி சதவீதத்தை அதிகரிக்கும் பொருட்டு அரசு பள்ளிகளில் 6 வகுப்பு  முதல் + 2 வரை தமிழ் வழியில் பயின்று உயர் கல்வி கற்க செல்லும் மாணவியருக்கு மாதம் ரூ.1000,மாணவர்களுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் தமிழ்ப்புதல்வன் திட்டம் மூலம் மாதம் ரூ.1000 வழங்கும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். பள்ளிக் கல்விக்கு பின் கல்லூரிக் கல்வி கற்க வரும் மாணாக்கரின் எண்ணிக்கை 50 சதவீதம் பேர்  இடைநிற்றல் இன்றி இருக்க வேண்டும் என தேசிய கல்விக்கொள்கை இலக்கு வைத்துள்ளது.ஆனால் தமிழ்நாட்டில்  தற்போது 63 சதவீதம்  மாணாக்கர் இடைநிற்றல் இன்றி உயர் கல்வியை தொடர்கின்றனர்.எண்ணும் எழுத்தும் திட்டம் மூலம் கடந்த 3 ஆண்டுகளில் தேசிய அளவிலான கல்வியில்  தமிழ்நாடு முன்னேறி உள்ளது. அரசுப்பள்ளி அவமானமல்ல  அரசுப்பள்ளி அடையாளம் என்ற நிலை தற்போது உள்ளது.     

தன்னம்பிக்கை பேச்சு என்ற போர்வையில் மாணாக்கரிடம் மூட நம்பிக்கை கருத்துகளை ஒருவர் பேசுகிறார்.இது பற்றி அறிந்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அப்பள்ளிக்கு சென்று,அறிவியல் வழியில் தான் கல்வி கற்பிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.அரசு பள்ளி +2 முடித்து நான் முதல்வர் திட்டம் மூலம் ஐஐடியில் பயின்று 635 வெளியேறி,வேலை வாய்ப்பு தேடி வெளிநாடுகள்  சென்றுள்ளனர்.ராமநாதபுரம் போன்ற பின் தங்கிய மாவட்டங்களை சேர்ந்தோர் அரசு பள்ளிகளை நோக்கி கல்வி கற்க முன் வந்துள்ளனர்.தேசிய கல்விக்கொள்கை ஏற்காததால் மானியத்தை நிறுத்தி ஆசிரியர்களை ஒன்றிய அரசு வஞ்சித்து வருகிறது. இது குறித்து குரல் கொடுக்க வேண்டிய பாஜக மவுனம் காத்து வருகிறது.மாநில கல்விக் கொள்கையால் என்ன சாதித்தீர்கள் என தமிழக கவர்னர் வினவுகிறார்.சி.பி.எஸ்.இ பாடத்திட்டம் பயின்ற பிற மாநில மாணவர்கள் வேலை வாய்ப்பு தேடி தமிழ்நாட்டை நோக்கி வருகின்றனர்.திராவிட இயக்கத்தின் முன்னோடி,முன்னாள் முதல்வர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் வித்திட்ட மாநில கல்விக் கொள்கை படி தகவல் தொழில் நுட்ப கல்வியை அறிவியல் மனப்பாங்குடன் தமிழ் மொழி மூலம் கற்றதால் தமிழக அரசுப் பள்ளி மாணாக்கர் உலக நாடுகள் முழுவதும் வேலை வாய்ப்பு பெற்றுள்ளதே சாதனை தான்.கல்வியை காவி மயமாக்கும் முயற்சியை ஆர் எஸ் எஸ் செய்து வருகிறது.முற்போக்கு சிந்தனையில்லாத எந்த கருத்தையும் பள்ளி வளாகத்திற்குள் தமிழக அரசு அனுமதிக்காது.

இவ்வாறு அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *