பனைக்குளம்,நவ.10:-
இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஊராட்சி ஒன்றியம் பனைக்குளம் ஊராட்சியில் மதுரை வேலம்மாள் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை,இராமநாதபுரம் மாவட்ட பார்வையிழப்பு தடுப்புச் சங்கம்,பனைக்குளம் ஏ ஒன் கிளினிக் இணைந்து நடத்திய மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் பனைக்குளம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஏ ஒன் கிளினிக்கில் நடைபெற்றது.
இம்முகாமிற்கு பனைக்குளம் ஊராட்சி மன்றத்தலைவர் ஆர்.எம்.பௌசியா பானு சிறப்பு அழைப்பாளராக கலந்து முகாமை தொடங்கி வைத்தார்.மதுரை வேலம்மாள் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் ஐஸ்வர்யா,மோனிஷா,மிருதுளா உள்ளிட்டோர் வருகை தந்து பயனாளிகளுக்கு கண் பரிசோதனை செய்து சிகிச்சை வழங்கினர்.
இம்முகாமில் பனைக்குளம்,சோகையன் தோப்பு, கிருஷ்ணாபுரம்,புதுக்குடியிருப்பு,பொன்குளம்,தாமரையூரணி,அழகன் குளம்,புதுவலசை,இரணியன் வலசை உள்ளிட்ட பனைக்குளம் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஆண்கள்,பெண்கள்,குழந்தைகள் என 300-க்கும் மேற்பட்டோர் இம்முகாமில் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்து பயனடைந்தனர்.இதில் அறுவை சிகிச்சைக்காக 4 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.கண் பரிசோதனை செய்து 10-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு இலவசமாக கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டது.மீதமுள்ள பொதுமக்களுக்கு கண் மருந்து வழங்கப்பட்டு முகாம் சிறப்பாக நிறைவு பெற்றது.இம்முகாமிற்கான ஏற்பாடுகளை பனைக்குளம் ஏ ஒன் கிளினிக் நிறுவனர் கட்டை அஹமது இபுராஹிம் சிறப்பாக செய்திருந்தார்.