ராமநாதபுரம்,நவ.21:-
ராமநாதபுரம் மாவட்டம்,ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் இன்று (21.11.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தொடர்மழையால் மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது,சக்கரக்கோட்டை ஊராட்சி பகுதிகளில் தொடர்மழையின் காரணமாக தேங்கியுள்ள மழை நீரை சிவசக்தி நகர் அருகில் உள்ள தரவை வழியாக மழைநீர் வெளியேற்றப்பட்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டதுடன், சக்கரகோட்டை ஊராட்சியில் தொடர் மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ள இடங்களில் உள்ள மக்களை சோத்தூரணி நூலக கட்டிடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டதுடன்,தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவுகள் குறித்தும், அடிப்படை வசதிகள் குறித்தும், மருத்துவர்கள் மூலம் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படுவது குறித்தும் அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
தொடர்ந்து காட்டூரணி எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் உள்ள தாழ்வான இடங்களில் மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களை அங்கன்வாடியில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய தலைவர் கே.டி.பிரபாகரன்,ராமநாதபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தாமரைச்செல்வி,ராமநாதபுரம் வட்டாட்சியர் சுவாமிநாதன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.