ராமநாதபுரம் அருகே சேதமடைந்து காணப்படும் கடலாடி வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆண்டுதோறும் சம்பா பருவ சாகுபடியாக 1.37 லட்சம் ஹெக்டேரில் நெல் விவசாயம் நடைபெறுகிறது. இதற்காக விவசாயிகளுக்கு உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள்,இடுபொருள்கள் உள்ளிட்ட அனைத்தும் வழங்க மாவட்டத்தில் 11 வேளாண் விரிவாக்க மையங்கள் செயல்படுகின்றன.தற்போது கடலாடி வட்டாரத்தில் 25 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் நெல்,மிளகாய்,பருத்தி, சிறுதானியம்,ஆகியவற்றுக்கு விவசாயப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த விவசாயிகளுக்கான விதை நெல் மூட்டைகள்,சிறுதானிய விதைகள்,கடலாடி வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்திலும், சிக்கல் ஊராட்சியில் உள்ள விதை நெல் சேமிப்பு கிட்டங்கியிலும் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து தமிழ்நாடு வைகை பாசன விவசாயிகள் சங்க தலைவர் எம்.எஸ்.கே.பாக்கியநாதன் “பனைக்குளம் நியூஸ்” இணைய இதழுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியதாவது:-
ராமநாதபுரம் மாவட்டம் கடலடியில் உள்ள ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மைய கட்டிடம் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகும்.குறுகிய பகுதியாகவும்,சிதிலமடைந்து இடிந்து விழும் அபாயத்தில் உள்ள இக்கட்டிடத்தில் பணியாற்றும் ஊழியர்களும்,விவசாயிகளும் அச்சத்துடன் வந்து செல்கின்றனர். இங்கு தமிழ்நாடு அரசு வழங்கும் இடுபொருட்களை இருப்பு வைக்க அலுவலர்கள் கடும் சிரமப்படுகின்றனர்.இந்த அலுவலகத்தில் வேளாண் உதவி இயக்குனர் பணியிடம் கடந்த ஓராண்டாக காலியாகவே உள்ளது. இதனால் விவசாயம் தொடர்பான திட்டங்களை தெரிந்து கொள்ள முடியாமலும்,மத்திய,மாநில அரசுகளின் நலத்திட்ட உதவிகளை பெற முடியாமலும் விவசாயிகள் அவதி அடைகின்றனர்.பயிர் காப்பீடு, இயற்கை பேரிடர் காலங்களில் ஏற்படும் பயிர் சேதங்களுக்கு இழப்பீடும் விவசாயிகளுக்கு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பிற வட்டங்களில் அந்தந்த கிராமங்களில் வேளாண் உதவி இயக்குனர் தலைமையில் சிறப்பு முகாம்கள் நடத்தி விவசாயிகளை ஊக்கப்படுத்தியும்,வேளாண் சார்ந்த அறிவுரைகளை வழங்கியும் வருகின்றனர்.
ஆனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் திருவாடானை வட்டாரத்துக்கு அடுத்தப படியாக கடலாடி வட்டாரத்தில் தான் அதிக நெல் விவசாயம் நடைபெறுகிறது.இருப்பினும் கடலாடி வட்டார விவசாயிகளை வழிநடத்த எந்த வேளாண்துறை அதிகாரிகளும் முன்வரவில்லை என புகார் கூறப்படுகிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் மழை மறைவு பகுதியாகவும்,வைகை தண்ணீர் கிடைக்காத சூழலில் வானம் பார்த்த பகுதியாகவும் விளங்கும் கடலாடி வட்டத்தில் விவசாயிகளுக்கு மத்திய,மாநில அரசு திட்டங்கள் முறையாக சென்று சேர்வதில் நிர்வாக குளறுபடியும்,அதிகாரிகள் இல்லாததால் சேவைகளும் பாதிக்கப்படுகின்றன.
எனவே கடலாடி வேளாண் அலுவலகத்தில் காலியாக உள்ள உதவி இயக்குனர் பணியிடத்தை விரைவில் நிரப்ப வேண்டும். சேதமடைந்த கடலாடி ஒருங்கிணைந்த வேளாண் அலுவலக கட்டிடத்தை போர்க்கால அடிப்படையில் புதிதாக கட்ட வேண்டும் இதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க முன்வரவில்லை என்றால் கடலாடி வட்டார விவசாயிகளை திரட்டி காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.