பல்லடம் : வண்டல் மண், களிமண் அள்ளும் திட்டம் என்ற பெயரில், தமிழகத்தில் கிராவல் மண் கொள்ளையடிக்கும் திட்டம் அரங்கேறி வருவதாக, விவசாய சங்க நிர்வாகிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும், நீர் நிலைகளில் உள்ள வண்டல் மண் மற்றும் களிமண் எடுத்து விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள, அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் மூலம் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக விவசாய சங்க நிர்வாகிகளின் கருத்துகள்:
ஈசன் முருகசாமி (நிறுவனர், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்): வண்டல் மண் அள்ளுவதாக கூறி நீர்நிலைகளுக்குள் கிணறு ஆழத்துக்கு குழிகள் தோண்டப்பட்டு நீர்நிலைகள் சீரழிக்கப்பட்டு வருகின்றன. நீர் நிலைகளில் ஏற்கனவே அள்ளப்பட்டு உள்ளதால், தற்போது வண்டல் மண் இல்லாத சூழல்தான் நிலவுகிறது. சிறு – குறு விவசாயிகள் பெயரில், ஆளும் கட்சியினர், அரசியல்வாதிகள் வண்டல் மண் என்ற பெயரில் கிராவல் மண் எடுத்து பெரும் தொகைக்கு விற்று சம்பாதித்து வருகின்றனர்.
இதற்கு, திருப்பூர் மாவட்டம், பல்லடம் அனுப்பட்டி குட்டை மிகப்பெரும் உதாரணம். வண்டல் மண்ணே இல்லாத நீர்நிலைகளுக்கு பொய் சான்று வழங்கப்பட்டு, விவசாயிகள் பெயரில் விண்ணப்பிப்பவர்களுக்கு மண் கடத்த அனுமதி வழங்கப்படுகிறது. அனுமதியை பயன்படுத்தி, நுாற்றுக்கணக்கான வாகனங்களுடன் வரும் மண் கடத்தல் கும்பல், ஒட்டுமொத்தமாக கனிம வளங்களை அள்ளிச் செல்கின்றனர்.
அணைகளில் மட்டுமே இது போன்ற வண்டல் மண் அதிக அளவில் தேங்குவது வழக்கம். அவற்றை முறையான தொழில் நுட்ப உதவியுடன் எடுத்து விவசாயிகளுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செல்லமுத்து (மாநில தலைவர், உழவர் உழைப்பாளர் கட்சி): அணைகளாக இருந்தால் ஐந்து அடிக்கும், குளம் – குட்டைகளானால் ஒன்றரை அடிக்கும் வண்டல் மண் மற்றும் களிமண் தேங்கும். தமிழகத்தில் அனுமதி வழங்கப்படுவது இந்த ஒன்றரை அடிக்கு மட்டுமே அல்ல.
ஒட்டுமொத்த நீர் நிலைகளிலும் உள்ள கிராவல் மண்களை கொள்ளையடிக்கவே திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
சிறு, குறு விவசாயிகளிடம் போதிய வாகன வசதி கிடையாது. வண்டல் மண் தேவைப்படும் சாதாரண விவசாயிகள் யாரும் ஆன்லைனில் விண்ணப்பிக்க மாட்டார்கள். இது விவசாயிகளுக்கான திட்டம் அல்ல. ஆளும் கட்சியுடன் சில மண் கொள்ளை மாபியாக்கள் இணைந்து நடத்தும் கடத்தல் திட்டமே இது.