பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தில் நெற்பயிர் காப்பீட்டு நாள் நீட்டிப்பு-கலெக்டர் தகவல்!!!

ராமநாதபுரம்,நவ.18:-

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது:-

பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தில் (PMFBY) 2024-25-க்கு இராபி சிறப்பு பருவம் நெற்பயிருக்கு காப்பீடு செய்வதற்கு கடைசி நாள் 30.11.2024 வரை நீட்டிப்பு செய்து மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 2024-25 ஆம் ஆண்டுக்கு பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் (PMFBY) செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் தவிர்க்க இயலாத பாதகமான சூழ்நிலைகளான வறட்சி, வெள்ளம், தொடர் மழை, தொடர் வறண்ட தினங்கள் ஏற்படும் போது மகசூல் இழப்பு ஏற்பட்டால் அறிவிக்கை செய்யப்பட்ட வருவாய் கிராமங்களுக்கு / பிர்காகளுக்கு பயிர் அறுவடை பரிசோதனை மகசூல் மற்றும் உத்திரவாத மகசூல் அடிப்படையில் உரிய இழப்பீடு வழங்கப்படும்.ராமநாதபுரம் மாவட்டத்திற்கு இந்த வருடம் ராமநாதபுரம் 1-ன் கீழ் கமுதி, கடலாடி, முதுகுளத்தூர்,பரமக்குடி,சத்திரக்குடி ஆகிய வட்டாரங்களுக்கு எஸ்பிஐ ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் (SBI General Insurance Co.Ltd.,) நிறுவனம் மற்றும் ராமநாதபுரம் 2-ன் கீழ் ராமநாதபுரம்,திருப்புல்லாணி, ஆர்.எஸ்.மங்கலம்,திருவாடாணை, நயினார்கோவில்,மண்டபம் ஆகிய வட்டாரங்களுக்கு (Bajaj Allianz GIC) பஜாஜ் அலையன்ஸ் பொது காப்பீட்டு நிறுவனத்திற்கும் அரசாணை வழங்கி இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

நெற்பயிருக்கு ஏக்கர் 1-க்கு பிரமியத் தொகை ரூ.352 /- ஆகும். கடந்த 15-ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்ட நிலையில் இராமநாதபுரம் மாவட்டத்தில் 15.11.2024 வரை 128080 ஹெக்டேருக்கு 125648 விவசாயிகள் நெற்பயிருக்கு பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின்கீழ் பதிவு செய்து உள்ளனர்.

மேலும் தீபாவளி,ஆயுதபூஜை விடுமுறையாலும், வடகிழக்கு பருவமழை தாமதமாக பெறப்பட்டதாலும்,விவசாயிகளின் கோரிக்கைகளுக்கிணங்க நெற்பயிர் காப்பீட்டு நாள் 30.11.2024 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

எனவே கடைசி நாளுக்குள் விவசாயிகள் கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல்,ஆதார் அட்டை நகல், ஆதார் எண்ணுடன் இணைத்த வங்கி கணக்கு புத்தக முதல் பக்க நகல்,ஆகிய விவரங்கள் கொண்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் (PACCS),பொது சேவை மையங்கள் (CSC) மற்றும் விவசாயிகளின் வங்கி கணக்கு உள்ள பொதுவுடமை வங்கிகளை தொடர்பு கொண்டு பிரீமியம் செலுத்தி பயிர் காப்பீட்டினை செய்து கொள்ளலாம் எனவும்,பயிர் காப்பீடு செய்யும் போது சாகுபடி செய்துள்ள கிராமத்தின் பெயர், புல எண், பரப்பு, வங்கி கணக்கு எண் ஆகியவை சரியாக பதிவு மேற்கொள்ளப்பட்டுள்ளதா என விவசாயிகள் சரிபார்த்து கொள்ள வேண்டும் என்றும் நீட்டிப்பு செய்த நாட்களுக்குள் பயிர் காப்பீட்டினை செய்து விவசாயிகள் பயனடையலாம் என மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *