இராமநாதபுரம்,நவ.16:-
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது:-
இராமநாதபுரம் மாவட்டம், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மூலம் தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் திட்டத்தின்கீழ் புதிய சிறுதானியம் பதப்படுத்தும் மையங்களை அமைக்கவும் மற்றும் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள சிறுதானியம் பதப்படுத்தும் மையங்களை விரிவு படுத்துவதற்காகவும், சிறுதானிய மதிப்பு கூட்டும் இயந்திரங்கள் 75 சதவீத மானியத்தில் (அதிகபட்சமாக ரூ.18.75 இலட்சம்) வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின்கீழ் தனிநபர்,உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், கிராமப்புற இளைஞர்கள், வேளாண் தொழில் முனைவோர்கள் மற்றும் வேளாண்மை உட்கட்டமைப்பு நிதிபயனாளிகள் நிதி உதவி பெற தகுதியுடையவர் ஆவார்கள்.
இத்திட்டம் மூலம் தானியம் சுத்தம் செய்யும் இயந்திரம் (Pre Cleaner), கல் மற்றும் தூசி நீக்கும் இயந்திரம் (Destoner), தோல் நீக்கும் இயந்திரம் (Dehuller), மாவு அரைக்கும் இயந்திரம் (Pulveriser), தானியத்தை நிறம் பார்த்து பிரிக்கும் இயந்திரம் (Multi Grain Colour sorter), தானியம் மெருகூட்டும் இயந்திரம் (Grain Polisher), சிப்பமிடும் இயந்திரம் (Packing Machine), எடையிடும் இயந்திரம் (Weighing Machine) மற்றும் முத்திரையிடும் இயந்திரம் (Sealing Machine) போன்ற முதன்மை பதப்படுத்தும் இயந்திரங்கள் அனைத்தையுமோ அல்லது தேவைகளின் அடிப்படையில் தனிப்பட்ட இயந்திரங்களையும் 75 சதவீத மானியத்தில் பெற்று பயனடையலாம்.
சிறுதானிய முதன்மை பதப்படுத்தும் இயந்திரங்கள் அமையவுள்ள மையங்களுக்கு வங்கியின் மூலம் மானியம் வழங்கப்படும். இயந்திரங்கள் வாங்குவதற்கு மட்டும் மானியம் வழங்கப்படும். விண்ணப்பதாரர் வேளாண் உட்கட்டமைப்பு நிதி (AIF) திட்டத்தின் கீழ் வட்டி மானியத்திற்கும் தகுதியுடையவர். வட்டி மானியத்தைப் பெற விண்ணப்பதாரர் முதலில் வேளாண் உட்கட்டமைப்பு நிதி (AIF) வலைதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். மற்ற திட்டங்களின் கீழ் இயந்திர மானியம் பெறாத பயனாளிகள் மட்டுமே இத்திட்டத்தில் பெற தகுதியுடையவர். மேலும் திட்டமதிப்பீட்டில் பயனாளியின் பங்களிப்பு குறைந்தபட்சம் 10 சதவீதத்தோடு, வேளாண் உட்கட்டமைப்பு நிதி திட்டத்தின்கீழ் 3% வட்டி மானியமும் பெறலாம்.இத்திட்டத்தின்கீழ் கிடைக்கப்படும் மானியத் தொகையானது வேளாண் உட்கட்டமைப்பு நிதி பயனாளிகளின் செயல் திறன் அடிப்படையில் முறையே 60 சதவீதம் மற்றும் 40 சதவீதம் ஆகிய இரண்டு தவணைகளில் அந்தந்த வங்கியில் வைத்திருக்கும் பயனாளிகளின் கடன் கணக்கில் விடுவிக்கப்படும்.இராமநாதபுரம் மாவட்டத்தில் சுமார் 5900 எக்டேரில் கம்பு, சோளம், கேழ்வரகு, வரகு மற்றும்
சாமை போன்ற சிறுதானியப் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. சிறுதானியங்களில் புரதச்சத்து, அமினோ அமிலம், இரும்புச்சத்து, கால்சியம் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுவதோடு மருத்துவ குணங்களும் நிறைந்துள்ளது.மேலும் சிறுதானியங்களை மதிப்பு கூட்டி விற்பனை செய்யும் பொழுது அதிக இலாபம் பெறுவதோடு ஏற்றுமதி வாய்ப்பும் அதிகம்.
எனவே,தொழில்முனைவோர் மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் அனைவரும் இத்திட்டத்தினை பயன்படுத்தி சிறுதானிய மதிப்பு கூட்டு இயந்திரங்களை நிறுவி பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.