பாம்பன் புதிய ரயில்வே பாலம் பலவீனமானது-ரயில்வே பாதுகாப்பு ஆணையரின் ஆய்வறிக்கை தீவிரமானது எஸ்டிபிஐ மக்களின் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கும் கட்டுமான முறைகேடு குறித்து சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தல்.!

பாம்பன் புதிய ரயில்வே பாலம் பலவீனமானது-ரயில்வே பாதுகாப்பு ஆணையரின் ஆய்வறிக்கை தீவிரமானது எஸ்டிபிஐ மக்களின் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கும் கட்டுமான முறைகேடு குறித்து சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இராமநாதபுரத்தில், மண்டபம் – ராமேஸ்வரத்திற்கு இடையே புதிதாக கட்டப்பட்டுள்ள பாம்பன் ரயில்வே பாலத்தில், வடிமமைப்பு மற்றும் கட்டுமான குறைபாடுகளால் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் தனது ஆய்வறிக்கையில் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

மண்டபம் – ராமேஸ்வரத்திற்கு இடையே உள்ள பாம்பன் கடல் பகுதியில் இந்திய ரயில்வேயால் சுமார் 500 கோடி ரூபாய் செலவில் புதிய ரயில் பாலம் கட்டப்பட்டுள்ளது. இப்பாலத்தின் உறுதித்தன்மை, கடல் அரிப்பு, கர்டர்களின் தாங்கு திறன், தூண்களின் வலுத்தன்மை ஆகியவை குறித்து கடந்த நவம்பர் 13,14 தேதிகளில் தென் மண்டல ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சௌத்ரி ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் அறிக்கையை கடந்த நவம்பர் 26-ஆம் தேதி ரயில்வே வாரிய செயலாளருக்கு அவர் சமர்ப்பித்தார்.

அந்த அறிக்கையில், புதிய பாம்பன் பாலம் மோசமான முன்னுதாரணத்தின் அடிப்படையில், பாலம் திட்டமிடுதலில் தொடங்கி செயலாக்கம் வரை வெளிப்படையான குறைபாடுகளைக் கொண்டுள்ளது என்றும், ரயில்வே அமைச்சகத்தின் கீழ் உள்ள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவான ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தரநிலை அமைப்புகளால் (RDSO) பரிந்துரைக்கப்பட்ட தரத்திற்கு ஏற்ப லிஃப்ட் ஸ்பான் கர்டர் கட்டமைக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பாலம் கட்டுமானத்தில் செய்யப்பட்டுள்ள வெல்டிங் உரிய தரத்தில் இல்லை என்றும், அதன் தரத்தை தெற்கு ரயில்வேயின் கட்டுமான ஆய்வுக் குழு சோதனை செய்யவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலகிலேயே அதிக அரிமானம் ஏற்படக் கூடிய 2வது பகுதியாக கருதப்படும் கடல்பகுதியில் பாலம் கட்டப்படுவதால் ஏற்படக்கூடிய அரிப்பு சேதம் குறித்தும் உரிய கவனம் செலுத்தவில்லை; மட்டுமின்றி கட்டப்பட்டுள்ள பாலத்தில் ஏற்கனவே அரிமானம் ஏற்பட தொடங்கிவிட்டது என்றும், அதனை சுட்டிக்காட்டிய பிறகும் கூட எந்த நடவடிக்கையும் இல்லை என்றும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

ரயில்வே பாதுகாப்பு ஆணையரின் இந்த ஆய்வறிக்கை தீவிரமானது. பாலத்தில் உள்ள குறைபாடுகள் மக்களின் பாதுகாப்பு தொடர்புடையது. தரம் இல்லாத இத்தகைய கட்டுமானத்தில் நிச்சயம் முறைகேடு நடந்திருக்க வாய்ப்புகள் உள்ளது. ஆகவே, புதிய பாம்பன் ரயில்வே பாலம் கட்டுமானம் தொடர்பாக ஒரு சுயாதீன குழுவை அமைத்து விசாரணை மேற்கொள்ள வேண்டும். பாலத்தின் உறுதித் தன்மையை முழுமையாக உறுதி செய்த பின்னரே அதனைப் பயன்பாட்டுக்கு அனுமதிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் தவறிழைத்த அனைத்து அதிகாரிகளின் மீதும், கட்டுமான நிறுவனத்தின் மீதும், சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *