டாக்டர் மீது கத்திக்குத்து:தொடர் தாக்குதல் சம்பவங்கள் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது–அண்ணாமலை!!!

சென்னை கிண்டி அரசு மருத்துவமனை வளாகத்திற்குள்ளேயே வைத்து, புற்றுநோய் டாக்டர் பாலாஜி, கத்தியால் குத்தப்பட்டுத் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் டாக்டர் பாலாஜி, விரைந்து நலம்பெற, இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

ஏற்கனவே பல முறை, மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள் என தாக்கப்பட்ட சம்பவங்கள் நிகழ்ந்தும், தி.மு.க. அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சட்டம் ஒழுங்கைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்,ஒவ்வொரு முறையும் இது போன்ற விரும்பத்தகாத நிகழ்வுகளின்போது, அரசு நடவடிக்கை எடுக்கும் என்று கூறுவதோடு மட்டுமே நிறுத்திக் கொண்டு, எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதால், தொடர்ச்சியாக பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குரியதாகியிருக்கிறது.

கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம், நெல்லை அரசு மருத்துவமனையில், பயிற்சி டாக்டர் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த ஆண்டு மார்ச் மாதம், வேலூர் அரசு மருத்துவமனையில், மருத்துவப் பயிற்சி மாணவர் கடுமையான தாக்குதலுக்கு உள்ளானார். கடந்த வாரம், திருச்சி இஎஸ்ஐ மருத்துவமனை வளாகத்தில், டாக்டர் மீது, தி.மு.க. உறுப்பினர் உள்ளிட்ட 10 பேர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தொடர்ந்து டாக்டர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் நடைபெறுவது, டாக்டர்கள் இடையே அச்ச உணர்வை ஏற்படுத்தியிருக்கிறது. இது போன்ற குற்ற நிகழ்வுகளைத் தடுக்காமல், ஒவ்வொரு முறையும், நடவடிக்கை எடுப்போம் என்று பெயரளவில் மட்டுமே முதல்-அமைச்சர் கூறுவது, பொதுமக்களிடையே அவநம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை தி.மு.க. அரசு உணர வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *