பெங்களூருவில் விடுதியில் நுழைந்து கிரிதி குமாரி என்ற பெண்ணை கொலை செய்த அபிஷேக் என்பவர் மத்தியப் பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் கிரிதி குமாரி தனியார் தங்கும் விடுதியில் தங்கியிருந்தார். அவருடன் வேறொரு பெண்ணும் உடன் தங்கியிருந்தார். உடன் தங்கியிருந்த அந்த பெண்ணுக்கும் அவருடைய காதலருக்கும் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டுள்ளது. பிரச்னை ஏற்படும் போதெல்லாம் கிரிதி குமாரி, அவர்கள் இருவரையும் காதலை முறித்துக் கொண்டு பிரிந்து விடுமாறு கூறியுள்ளார்.
இதனால், கிரிதியின் மீது கோபமுற்ற அபிஷேக் கிரிதி குமாரியை கொல்ல திட்டமிட்டுள்ளார். இதனைத் தொடந்து, கடந்த ஜூலை 23ஆம் தேதி இரவு 11 மணியளவில் கிரிதியின் அறைக்குள் சென்ற அபிஷேக், தான் கொண்டு வந்த கத்தியால் கிரிதியை பலமுறை தாக்கியுள்ளார். இதனால், காயமடைந்த கிரிதி சரிந்து விழுந்து உயிரிழந்தார்.
பின்னர், கொலை செய்த அபிஷேக் சம்பவ இடத்தை விட்டு தப்பி ஓடியுள்ளார். இதனைத் தொடர்ந்து, கிரிதி தங்கியிரிந்த விடுதியில் இருந்தவர்கள் காவல்துறைக்கு புகார் அளித்துள்ளனர். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து, அபிஷேக்கை காவல்துறையினர் தேடி வந்தனர். இந்நிலையில், தப்பிச் சென்ற அபிஷேக் மத்தியப் பிரதேசத்தின் போபால் நகரில் இருப்பது தெரியவந்தது. பின்னர் அவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.