ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி ஊராட்சியில் ரூ.37 லட்சத்தில் 1200 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்ட மெட்டல் சாலை தரமற்ற பணியால்இரு மாதத்தில் சேதமடைந்து விட்டதாக மக்கள் குற்றம் சாட்டினர்.
ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றியம் திருப்பாலைக்குடி ஊராட்சி சார்பில் செப்டம்பர் மாதம் பழங்கோட்டையில் இருந்து கோட்டைத்திடல் வரை ரூ.37 லட்சத்தில் 1200 சதுர மீட்டர் பரப்பளவில் மெட்டல் சாலை அமைக்கப்பட்டது.
இது குறித்து திருப்பாலைக்குடி ஊராட்சித் தலைவர் உமர் பாரூக் செய்தியாளர்களிடம் கூறுகையில்:-
பழங்கோட்டை கண்மாய் கரையில் இருந்து 1200 சதுர மீட்டர் பரப்பளவில் சாலை தரமாக அமைக்கப்பட்டு உள்ளது.அரசு வழிகாட்டுதலின் படி கண்மாயில் வண்டல் மண் எடுக்க தினமும் 300-க்கும் அதிகமான கனரக வாகனங்கள் சென்று வந்ததால் சாலை சில இடங்களில் சேதமடைந்தது.அதை சீரமைக்கும் பணி நடக்கிறது.
இது மழைக்காலம் என்பதால் மழையினால் காரணத்தால் சீரமைக்கப்பட்ட சாலையானது அவ்வப்போது சேதமடைந்து வருகிறது.தேர்தல் நெருங்கி வரும் வேலையில் எனது அரசியல் எதிரிகள் வேண்டும் என்றே என் மீது பொய்யான அவதூறுகளை பரப்புகின்றனர்.கடந்த காலங்களை விட நான் ஊராட்சி தலைவராக பொறுப்பேற்றதிலிருந்து என்னால் இயன்ற அளவுக்கு திருப்பாலைக்குடி ஊராட்சிக்கு தேவையான அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை மாவட்ட நிர்வாகம் மூலம் பெறப்பட்ட நிதியிலிருந்து செய்து வருகிறேன்.என் பெயரை கெடுக்கும் நோக்கில் எங்கே நான் மீண்டும் ஊராட்சி தலைவராக வந்து விடுவேனோ என்கிற பயத்தில் எனக்கு வேண்டாதவர்கள் என் மீது பரப்பும் அவதூறுகளை மக்கள் மன்றத்தில் சட்டரீதியாக எதிர்கொள்வேன் என்றார்.