தமிழர் அதிகாரம் அமைப்பின் மாநில தலைவர் இரா.சு.அழகர்சாமி பாண்டியன் இராமநாதபுரத்தில் இன்று காலை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தில் இருந்து வங்க கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 22 பேரை சிங்கள கடற்படை கைது செய்து சிறையில் அடைத்து அவர்களின் நான்கு விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ராமநாதபுரம்,புதுக்கோட்டை,தஞ்சாவூர், நாகப்பட்டினம்,தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் சிங்கள அரசால் கைது செய்யப்படுவது இந்திய இறையாண்மைக்கு விடப்படும் சவாலாகும்.இனியும் இது தொடர மத்திய மாநில அரசுகள் அனுமதிக்க கூடாது.
2024-ம் ஆண்டில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கைது செய்யப்பட்டு சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.2018 முதல் 2024 வரை பறிமுதல் செய்யப்பட்டு இலங்கை வசமுள்ள படகுகளையும் சிறையில் உள்ள மீனவர்களையும் எவ்வித நிபந்தனையும் இன்றி விடுவிக்கவும்,மீனவர்கள் மீது தாக்குதல், துப்பாக்கிச்சூடு,படகுகளை சேதப்படுத்தி கடலில் மூழ்கடிப்பது, மொட்டை அடித்து அவமானப்படுத்துவது, லட்சக்கணக்கான ரூபாய் அபதாரம் விதிப்பு,என அடாவடி செய்யும் இலங்கை கடற்படை மீது சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பதோடு 1974-ம் ஆண்டு செய்யப்பட்ட இந்திரா சிறிமாவோ ஒப்பந்தத்தை ரத்து செய்து கச்சதீவை திரும்ப பெற வேண்டும்.
ஆறு தலைமுறைகளாக மாஞ்சோலையில் வாழ்ந்து வரும் 589 குடும்பங்களை சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட மக்கள் அங்கேயே தொடர்ந்து வாழ்வதற்கு, வாழ்வுரிமையை காப்பதற்கு போராடி வருகிறார்கள். தேயிலை தோட்டத்தில் பணிபுரிந்த மக்களுக்கு உரிய நீதி நிவாரணம் வழங்காமல் பி.பி.டி.சி கம்பெனியும் திருநெல்வேலி மாவட்ட அரசு நிர்வாகமும் இணைந்து மக்களை வெளியேற்றும் நோக்கத்தில் மின்சாரம்,குடிநீர் பேருந்து உள்ளிட்ட அடிப்படை வசதிகளை துண்டித்து பெரும் நெருக்கடிக்கு உள்ளாக்கி வருகிறார்கள்.வனப்பகுதியிலேயே அம்மக்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்துவதற்கு மாறாக வெளியேற்றுவதில் மட்டுமே முனைப்பு காட்டப்படுகிறது.இதுநாள் வரை மக்களால் வனவிலங்குகளுக்கோ வனத்திற்கோ வனவிலங்குகளால் மக்களுக்கோ யாதொரு தீங்கும் ஏற்படாத நிலையில் வனச்சட்டத்தின் பெயரில் மக்களை வெளியேற்றி விட்டு மாஞ்சோலை பகுதியை தனியார் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கும் சூழ்ச்சியாகும்.
2006 நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பழங்குடிகள் மற்றும் வனத்தைச் சார்ந்து வாழும் இதர சமூகத்தினருக்குக் காடுகளின் மீதான உரிமைகளை அங்கீகரிக்கும் சட்ட விதிகள் பின்பற்றப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி செய்து வரும் தொடர் முன்னெடுப்புகளை வரவேற்று துணை நிற்கிறோம்.மாஞ்சோலை மக்களுக்கு அனைத்து ஜனநாயக சக்திகளும் நேசக்கரம் நீட்ட வேண்டும்.மாஞ்சோலை மக்களின் வாழ்வுரிமை காக்க,ஐந்து மாவட்ட மீனவர்கள் படகுகளை விடுவிக்க மத்திய,மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.