ராமநாதபுரத்தில் ரூ 32 லட்சம் மதிப்புள்ள உயர் ரக போதை பொருளுடன் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
ராமநாதபுரத்தில் உயர் ரக போதை பொருளான ஐஸ் மெத்த பெட்டமைன் பயன்படுத்தப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அவரது உத்தரவின் பேரில் உதவி சூப்பிரண்டு சிவராமன் தலைமையில் கேணிக்கரை இன்ஸ்பெக்டர் ஆறுமுகம்,சப்-இன்ஸ்பெக்டர்கள் தங்க ஈசுவரன், தினேஷ் உள்ளிட்டோர் கொண்ட தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
விசாரணையில் ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினத்தைச் சேர்ந்த மைதீன் கனி என்பவரின் மகன் முஹம்மது ஹாரிஸ் வயது (29),ஐஸ் மெத்த பெட்டமைன் போதை பொருளை சப்ளை செய்தது தெரிய வந்தது இவருக்கு ராமநாதபுரம் நேரு நகர் 1-வது தெருவை சேர்ந்த சந்திரன் மகன் ஜெகதீஷ் வயது (29) உடந்தையாக இருந்து இந்த போதை பொருளை இளைஞர்களுக்கு மற்றும் இளம் பெண்களுக்கு சப்ளை செய்து வந்ததும் தெரிய வந்தது இதை தொடர்ந்து இருவரையும் பிடிக்க போலீசார் திட்டமிட்டனர்.
நேற்று காலை ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலை நகராட்சி குப்பை கிடங்கு பகுதியில் மேற்கண்ட இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்ற போது தனிப்படை போலீசார் மடக்கி பிடித்தனர்.அவர்களிடம் நடத்திய சோதனையில் மெத்த பெட்டமைன் போதைப் பொருள் சிறிதளவும் மற்றும் ரொக்கம் ரூ.45 ஆயிரம்,6 செல்போன்கள் இருந்ததை பறிமுதல் செய்தனர்.இவர்களின் வீடுகளில் சென்று சோதனையிட்டபோது படிகம் வடிவிலான சுமார் 300 கிராம் எடையுள்ள மெத்த பெட்டமைன் போதைப் பொருள் இருந்ததை பறிமுதல் செய்தனர்.இதன் இந்திய மதிப்பு ரூ.32 லட்சம் ஆகும்.சர்வதேச மதிப்பு ஐந்து மடங்கு அதிகம் என்றும் அதிகபட்சமாக 2 கோடி வரை விலை போகும் என்றும் கூறப்படுகிறது.கைது செய்யப்பட்ட இருவரிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு சந்தீஷ் நிருபர்களிடம் கூறியதாவது:-
மெத்த பெட்டமைன் போதைப் பொருள் விற்பனை செய்வதாக மேற்கண்டவர்கள் குறித்து தகவல் வந்தது.கையும்,களவுமாக பிடிக்க தொடர்ந்து கண்காணித்து வந்தோம். தற்போது தான் சிக்கி உள்ளனர். இவர்களிடம் ராமநாதபுரத்தைச் சேர்ந்த 3 பேர் மெத்த பெட்டமைன் போதைப் பொருளை வாங்கி சில்லறையாக விற்பனை செய்வது தெரிய வந்துள்ளது.அவர்கள் குறித்தும் இவர்களுக்கு சப்ளை செய்யும் 2 பேரின் விவரமும் தெரியவந்துள்ளது. அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்.மெத்த பெட்டமைன் போதைப்பொருள் என்பது மிகவும் அபாயகரமானது.மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை தூண்டி உச்சகட்ட போதைக்கு கொண்டு சென்று செயல் இழக்க செய்துவிடும். வாழ்நாளை பாதியாக குறைத்து விடும்.அந்த அளவிற்கு மோசமான போதை மருந்து.50 கிராம் மெத்த மெத்த பெட்டமைன் என்பது 20 கிலோ கஞ்சாவிற்கு சமமாகும்.எனவே ராமநாதபுரம் மாவட்டம் மக்கள் இதுபோன்ற போதை பொருள் பழக்கத்திற்கு ஆளாகாமல் விழிப்புடன் இருக்க வேண்டும்.இந்த விவகாரத்தில் குற்றவாளிகளை விரைந்து பிடித்த உதவி சூப்பிரண்டு சிவராமன் தலைமையிலான தனிப்படை போலீசாரை பாராட்டுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.