செங்கல்பட்டு அருகே சுங்கச்சாவடியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது 30 லட்சம் ரூபாய் ரொக்கம் 500 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அருகே உள்ள ஆத்தூர் சுங்கச்சாவடியில்
காவல்துறையினர் வாகன சோதனை ஈடுபட்டிருந்தனர். அப்போது சென்னை தாம்பரத்திலிருந்து திண்டிவனம் நோக்கி கார் ஒன்று வேகமாக சென்று கொண்டிருந்தது. அதி வேகமாக வந்து கொண்டிருந்த கார், அருகில் வந்த மற்றொரு வாகனத்தில் இடித்து விபத்து ஏற்படுத்தியது.
அப்போது காவல்துறையினர் அந்த காரை தடுத்து நிறுத்தினர். பின்னர், கார் ஓட்டுநரை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது காரில் இருந்து ஒருவர் வைத்திருந்த பையை தூக்கிக் கொண்டு தப்பி ஓடி உள்ளார். காவல்துறையினரின் விசாரணையில் அவர், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள பிரம்மதேசம் பகுதியைச் சேர்ந்த ஃபாரஸ் என்பது தெரியவந்துள்ளது.
அவரை மடக்கி பிடித்த காவல்துறையினர், அவர் வைத்திருந்த பையை சோதனை செய்துள்ளனர். அதில், 30 லட்சம் ரூபாய் ரொக்கம் 500 கிராம் தங்க கட்டிகள் எந்த ஒரு ஆவணம் இன்றி இருந்துள்ளது. கார் மற்றும் பணம் மற்றும் தங்க கட்டியை காவல்துறையினர் பறிமுதல் செய்து வருமானவரித் துறையிடம் ஒப்படைத்தனர். மேலும் இது சம்பந்தமாக அச்சரப்பாக்கம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.