மைசூரு : ”மத்திய அரசு நடத்தும் தேர்வுகளை நமது தாய் மொழியான தமிழில் தேர்வு எழுதுவும் வாய்ப்பு உள்ளது. இதை நாம் பயன்படுத்தி கொள்ள வேண்டும்,” என புலிகள் திட்ட வன பாதுகாவலர் ரமேஷ்குமார் மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.
எஸ்.எஸ்.எல்.சி., 2ம் ஆண்டு பி.யு.சி., பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் தமிழர்களின் பிள்ளைகளுக்கு மைசூரு தமிழ் சங்கம் சார்பில், மைசூரு விஸ்வேஸ்வரா நகரில் உள்ள நோயல் வளாகத்தில் நேற்று பாராட்டு விழா நடத்தப்பட்டது.
சங்க தலைவர் எஸ்.பிரான்சிஸ் வரவேற்றார். முதல் பரிசாக 5,001 ரூபாய், இரண்டாம் பரிசாக 3,001 ரூபாய்; மூன்றாம் பரிசாக 2,001 ரூபாய்; மற்ற மாணவர்கள் அனைவருக்கும் தலா 1,001 ரூபாய் என மொத்தம் 43 மாணவர்களுக்கு ரொக்க பரிசும், பரிசுப் பொருட்களும், சான்றிதழும் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.
விழாவை துவக்கி வைத்து, ஐ.எப்.எஸ்., அதிகாரியான புலிகள் திட்ட வன பாதுகாவலர் ரமேஷ்குமார் பேசியதாவது:
மாணவர்கள் யு.பி.எஸ்.சி., – கே.பி.எஸ்.சி., – டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகள் எழுதுவது கடினம் என்று நினைக்க வேண்டாம்.
தொடர்ந்து முயற்சித்தால் அனைவரும் வெற்றி கனியை பறித்து விடலாம். அதுவும், மத்திய அரசு நடத்தும் தேர்வுகளை நமது தாய் மொழியான தமிழில் தேர்வு எழுதுவும் வாய்ப்பு உள்ளது. இதை நாம் பயன்படுத்த கொள்ள வேண்டும்.
படிப்பு எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு விளையாட்டும் முக்கியம். சாதிக்க தொடர்ந்து முயன்று கொண்டே இருக்க வேண்டும். முயற்சி ஒன்றே வெற்றியை தேடி தரும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பழனி புலிப்பாணி ஆஸ்ரமத்தின் சிவானந்த புலிப்பாணி பாத்திர சுவாமிகள், மைசூரு புனித பிலோமினா கல்லுாரி தமிழ்த்துறை இணை பேராசிரியர் சீதா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
சங்க பொதுச்செயலர் வெ.ரகுபதி நன்றி கூறினார். பங்கேற்ற அனைவருக்கும் மதிய உணவாக சைவம் – அசைவ உணவு விருந்தளிக்கப்பட்டது. மாணவ – மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.