ஒகேனக்கல் : தென்மேற்கு பருவமழை தீவிரத்தால், கர்நாடகவின் ஹேமாவதி, ஹாரங்கி, கபினி, கே.ஆர்.எஸ்., அணைகள் நிரம்பி, காவிரி ஆற்றில் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.
நேற்று கபினி அணையிலிருந்து, விநாடிக்கு, 35,000 கன அடி; கே.ஆர்.எஸ்., அணையிலிருந்து, 1,30,867 கன அடி என, 1,65,867 கன அடி உபரி நீர் காவிரியில் வெளியேற்றப்பட்டது.
இதனால் தமிழக எல்லையான பிகுண்டுலுவில் நேற்று மாலை, 1.60 கன அடி நீர் வரத்தானது.
இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ஐந்தருவி, ஐவர்பாணி, சினி பால்ஸ், மெயினருவி உள்ளிட்ட அனைத்து அருவிகள் மற்றும் நீர்வீழ்ச்சிக்கு செல்லும் நடைபாதையை மூழ்கடித்து தண்ணீர் பாய்ந்தோடுகிறது. பார்க்கும் இடமெல்லாம் வெள்ளக்காடாக மாறியுள்ளது.
கரையோர, தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல, மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. 13வது நாளாக நேற்றும் காவிரியாற்றில் குளிக்க, பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகத்தின் தடை தொடர்ந்தது.
இதையறியாமல் ஒகேனக்கலுக்கு வந்த சுற்றுலா பயணியரை, மடம் செக்போஸ்டிலேயே தடுத்து, போலீசார் திருப்பி அனுப்பி வருகின்றனர்.