ராமநாதபுரத்தில் பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி-கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தகவல்!!!

ராமநாதபுரம்,நவ.19:-

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது:-

தமிழ்நாடு அரசு, தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 2021-22ஆம் ஆண்டிற்கான மானியக்கோரிக்கையில், நாட்டிற்காக பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தியடிகள், ஜவகர்லால் நேரு, அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் பிறந்தநாளன்று ஆண்டுதோறும் மாவட்ட அளவில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்குப் பேச்சுப்போட்டி தனித்தனியே நடத்தி பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.

மானியக்கோரிக்கை அறிவிப்பிற்கிணங்க,நவம்பர் திங்கள் 14ஆம் நாள் ஜவகர்லால் நேரு அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அனைத்துக் கல்லூரி மற்றும் பள்ளி மாணவ மாணவியருக்குத் தனித்தனியே பேச்சுப்போட்டி நடத்தப்பட்டு பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கப்படும் என்று தமிழ் வளர்ச்சித் துறை அறிவித்துள்ளது.ராமநாதபுரம் மாவட்டத்தில் ஜவகர்லால் நேரு அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 29.11.2024 அன்று பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குப் பேச்சுப் போட்டிகள் தனித்தனியே நடத்தப்பெற உள்ளன.

மாவட்ட அளவில் நடத்தப்பெறும் இப்போட்டியில் பங்குபெற்று வெற்றிபெறும் பள்ளி,கல்லூரி மாணவ, மாணவியருக்குத் தனித்தனியே முதல் பரிசாக ரூ.5,000/- இரண்டாம் பரிசாக ரூ.3,000/- மூன்றாம் பரிசாக ரூ.2,000/- என்ற வகைப்பாட்டில் வழங்கப்பெற உள்ளது.அத்துடன் பள்ளி மாணவர்களுக்கானப் பேச்சுப்போட்டியில் பங்கேற்கும் மாணவர்களுள் அரசு பள்ளி மாணவர்கள் இருவரை மட்டும் தெரிவு செய்து அவர்கள் ஒவ்வொருவருக்கும் சிறப்பு பரிசுத்தொகையாக ரூ.2,000/- வீதமும் வழங்கபெற உள்ளது.ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் (ஒரு பள்ளிக்கு ஒருவர்,ஒரு கல்லூரிக்கு இருவர்) இப்பேச்சுப்போட்டியில் பங்கேற்கலாம். போட்டி நடைபெறும் இடம், நேரம், தலைப்பு, விதிமுறைகள் ஆகியவை பள்ளிகளுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் வாயிலாகவும், கல்லூரிகளுக்கு தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர்/கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் வாயிலாகவும் தெரிவிக்கப்பெறும். போட்டியில் பங்கேற்க விழையும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பள்ளித் தலைமையாசிரியர், கல்லூரி முதல்வரிடம் பரிந்துரைக்கடிதம் பெற்று போட்டி நாளன்று தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநரிடம் நேரில் அளித்தல் வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயற்பட்டு வரும் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரிலோ, தொலைபேசி வாயிலாகவோ (தொலைபேசி எண் 04567-232130) தொடர்பு கொள்ளலாம்.ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியர் இப்பேச்சுப்போட்டியில் பங்கேற்று பயன்பெற வேண்டுமென மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *