சென்னை,நவ.7:-
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில பொதுச்செயலாளர் முஜீபுர் ரஹ்மான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் போக்கு, தமிழ் திரைப்படத் துறையினரால் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகிறது.
நடிகர் கமல்ஹாசன் இதில் அதிக முனைப்பு காட்டக்கூடியவராக உள்ளார்.ஹேராம், உன்னை போல் ஒருவன்,விஸ்வரூபம் என பல திரைப்படங்களில் தொடர்ச்சியாக முஸ்லிம்களை தீவிரவாதிகளாக அவர் சித்தரித்து வருகிறார்.
அவருடைய விஸ்வரூபம் படம் வெளிவந்த போது அப்படத்திற்கு கடுமையான எதிர்ப்புகளை அவர் சந்தித்தார். இருந்த போதும் அவர் தன்னை திருத்திக் கொள்ளவில்லை. தற்போது அவருடைய தயாரிப்பில் அமரன் என்ற திரைப்படம் எடுக்கப்பட்டு அது திரைக்கு வந்துள்ளது.
இப்படம் இந்திய இராணுவ வீரர்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. இந்திய இராணுவ வீரர்களின் தியாகம் போற்றுதலுக்குரியது என்பதில் இருவேறு கருத்திற்கு இடமில்லை. மழை, வெயில், பனி என்று எத்தகயை கால சூழ்நிலைகளிலும் தேசம் காக்க உழைப்பவர்கள் இராணுவத்தினர். தன் குடும்பத்தைப் பிரிந்து இந்நாட்டைக் காக்க தங்கள் உயிர்களையும் கொடுப்பதற்கு முன்வருபவர்கள் இராணுவ வீரர்கள். இவர்கள் கண்டிப்பாக மதிக்கப்பட வேண்டியவர்கள் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை.
ஆனால் இராணுவ வீரர்களின் தியாகத்தைப் பறைசாற்ற எடுக்கப்பட்ட படமாக இருந்தாலும் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் போக்கை எவரும் ஏற்கமாட்டார். இராணுவ வீரர்களின் தியாகத்தை மையப்படுத்தி கதைக்களம் செல்வதால் அமரன் திரைப்படத்தை யாரும் எதிர்க்க மாட்டார்கள் என்று இவர்கள் தப்பு கணக்கு போட்டு விட்டனர்.
சொந்த நாட்டு மக்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் போக்கு மிகவும் ஆபத்தானது. காஷ்மீர் மக்களின் உண்மையான வரலாற்றிற்கு புறம்பாக இந்தப் படத்தை இவர்கள் தயாரித்துள்ளனர்.
விதவைப் பெண்களை கொச்சைப் படுத்துதல், காஷ்மீர் மக்கள் இராணுவத்தின் மீது கல்லெறிவது போலவும் அனைத்து மக்களும் தீவிரவாதிகளுக்கு துணை நிற்பது போலவும் இத்தகைய ஆபத்தான செயல்களுக்கு சொந்தக்காரர்கள் காஷ்மீர் மக்கள் என்கிற ரீதியில் காட்சிகளை அமைத்திருப்பதன் மூலம் அம்மக்கள் மீது பச்சை அவதூறுகளை புனைந்துள்ளனர் என்பது தெளிவாகின்றது
காஷ்மீர் மக்களின் உண்மை வரலாறு என்ன? காஷ்மீரைச் சேர்ந்த இளம்பெண்கள் பலர் கற்பழிக்கப் பட்டுள்ளனர். சிறுவர்கள் என்றும் பாராமல் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அங்கு சிறைக்கு சென்ற பலர் என்ன ஆனார்கள் என்பது கூட தெரியாமல் கணவனை , தந்தையை , உடன் பிறப்புகளை இழந்து வாடும் குடும்பங்கள் காஷ்மீரில் ஏராளம் உண்டு.
2016 களில் ஜனநாயக போராட்டங்களில் ஈடுபட்ட சொந்த நாட்டு காஷ்மீர் மக்களை பெல்லட் குண்டுகளால் இராணுவத்தினர் தாக்கியதை உலகம் மறந்திருக்காது. பூமிப்பந்தில் பல தேசங்கள் இந்த கோரத் தாக்குதலைக் கண்டித்தன. இத்தாக்குதலில் சிறியவர் பெறியவர் என பலரும் பாதிக்கப்பட்டார்கள். பலர் கண்களை இழந்தார்கள் . பலர் பெண்களை இழந்தார்கள். பல்லாயிரக்கணக்கான மக்களின் உடலை பெல்லட் குண்டுகள் துளைத்தன . இன்றளவும் அந்த தாக்குதல்களில் ஏற்பட்ட காயத் தழும்புகள் பலரின் உடலில் பாதிப்புச் சின்னங்களாக காட்சியளிக்கின்றன. இத்கைய செந்நீரும் கண்ணீரும் கலந்த சரித்திரத்தை இப்படத்தில் குறிப்பிட்டார்களா? இத்தகைய உண்மைகள் அனைத்தும் திட்டமிட்டே மறைக்கப்பட்டுள்ளன.
இந்திய நாட்டுடன் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்ட மக்களின் உணர்வுகளை ரணமாக்கி அவர்களில் சிலரை பிணமாக்கிக் கொடுமைப் படுத்திய நிகழ்வுகள் காஷ்மீரில் ஏராளம் உள்ளன.
அரசியல் தலைவர்களை வீட்டு சிறையிலிட்டு,செல்போன் டவர்களை செயலிழக்கச் செய்து,ஒட்டு மொத்த காஷ்மீரக மக்களையும் சிறைபிடித்து காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்கும் வேலைகள் முன்னெடுக்கப்பட்டன.
இவ்வாறு பரிதாபகர வாழ்க்கை வாழும் காஷ்மீரக மக்களை கொலை காரர்களாக சித்தரித்து காஷ்மீர் பைல்ஸ் என்ற திரைப்படம் சில ஆண்டுகளுக்கு முன் வெளிவந்தது. இத்திரைப்படம் திரையிடப்பட்டது அம்மக்களுக்கு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல்தான் இருந்தது. தற்போது காஷ்மீர் பைல்ஸின் நீட்சியாகவே அமரன் திரைப்படம் வெளி வந்துள்ளது.
அமரன் திரைப்படம் காஷ்மீர் மக்கள் அனைவரையும் தீவிரவாத செயல்களில் ஈடுபடக் கூடியவர்கள் என்ற பொய்யான சித்திரத்தை உருவாக்குகிறது.
இப்படிப்பட்ட மதவெறுப்புப் படத்தை வரவேற்று தமிழக முதல்வர் கருத்து தெரிவித்திருப்பது மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஒரு குறிப்பிட்ட மதத்தை தீவிரவாதிகளாக சமூக விரோதிகளாக சித்தரிப்பது திரைப்படங்களில் மட்டுமல்ல எந்த முறையில் முன்னெடுக்கப்பட்டாலும் அது கண்டிக்கப்பட வேண்டும். எனவே மக்களிடம் பிரிவினையைத் தூண்டுகிற மதநல்லிணக்கத்திற்கும் மதச்சார்பின்மைக்கும் எதிரான அமரன் திரைப்படத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாகக் கண்டிக்கின்றது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.