இலங்கை அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையே நேற்று (ஜூலை 27) நடைபெற்ற முதல் டி20 போட்டியில், இந்திய அணி தரப்பில் சூர்யகுமார் யாதவின் அபாரமான அரைசதத்துடன் இந்திய அணி அபாராக வெற்றி பெற்றது.
இதையடுத்து, இந்தியா – இலங்கை இடையிலான 2வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இந்த 2வது டி20 போட்டி மழை காரணமாக தாமதமாக தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பதும் நிஸ்ஸங்கா மற்றும் குசல் மெண்டி களமிறங்கினர். பின்னர், குசல் மெண்டி 11 பந்துகளில் 10 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பதும் நிஸ்ஸங்கா 24 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
பின்னர் களமிறங்கிய குசால் பெரரா 56 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்தடுத்து விளையாடிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 161 ரன்கள் குவித்தனர்.இந்தியா சார்பில் ரவி பிஷ்னோய் 3 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப் சிங், அக்சர் பட்டேல், ஹர்திக் பாண்டியா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இந்திய அணி முதல் ஓவரின் மூன்று பந்துகளை மட்டும் விளையாடிய நிலையில், மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் தடைபட்டது. சுமார் ஒரு மணி நேரம் வரை மழை பெய்தது. பிறகு மீண்டும் போட்டி தொடங்கியது. மழையால் ஒரு மணி நேர ஆட்டம் தடைபட்டதால் ஓவர்கள் குறைக்கப்பட்டன. டிஎல்எஸ் விதிப்படி இந்திய அணி 7.3 ஓவர்களுக்குள் 72 ரன்களை எடுக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இந்திய அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சஞ்சு சாம்சன் ஜோடி தொடக்க வீரர்களாக களமிறங்கியது. சாம்சன் ரன் ஏதும் எடுக்காமல் முதல் பந்திலேயே ஆட்டமிழந்து வெளியேறினார். ஜெய்ஸ்வால் 15 பந்துகளில் 30 ரன்களையும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் 12 பந்துகளில் 26 ரன்களையும் எடுத்தனர். இறுதியில் இந்திய அணி 6.3 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து இலக்கை எட்டியது. இந்தியா தரப்பில் ஹர்திக் பாண்டியா 9 பந்துகளில் 22 ரன்களுடனும், ரிஷப் பண்ட் 2 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்த போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.