ராமநாதபுரம்,நவ.24:-
ராமநாதபுரம் மாவட்டம்,மண்டபம், திருப்புல்லாணி,ராமநாதபுரம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் கடந்த வாரம் தொடர் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் மற்றும் தமிழ்நாடு கடல்சார் வாரியம் துணைத் தலைவர்,தலைமைச்செயல் அலுவலர் டாக்டர்.மா.வள்ளலார்,மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது,மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் மற்றும் தமிழ்நாடு கடல்சார் வாரியம் துணைத்தலைவர்,தலைமைச்செயல் அலுவலர் டாக்டர்.மா.வள்ளலார் மண்டபம் ஊராட்சி ஒன்றியம், ஆகஸ்தியர் கூட்டம்,புதுமடம், தாமரைக்குளம், ரெட்டையூரணி,காரான் மற்றும் ரெகுநாதபுரம் ஆகிய பகுதிகளில் நீரில் முழ்கியுள்ள நெல் வயல்களை பார்வையிட்டு விலை நிலங்களில் உள்ள தண்ணீரை அப்புறப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். மேலும் தென்னை மரங்கள் உள்ள நீர் நிலங்களில் அதிகளவு தண்ணீர் தேங்கி உள்ளதை பார்வையிட்டு தண்ணீர் வெளியேற்றுவதற்கான நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும் விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தவுடன்,கடந்த வாரம் தொடர் மழையால் சுமார் 774 எக்டர்கள் மழை நீரால் மூழ்கி பாதிக்கப்பட்டது என கண்டறியப்பட்டது.மேலும் வேளாண்மைத்துறை,தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் விளைநிலங்கள் உள்ள பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்கள்.பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு பெற்றுதர நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
தொடர்ந்து மண்டபம் ஊராட்சி ஒன்றியம்,இடையன்வலசை ஊராட்சியில் நடைபெற்ற கால்நடை மருத்துவ முகாமை பார்வையிட்டதுடன், மழை அதிகமாக பெய்த கிராமங்களில் கால்நடை பராமரிப்பு துறையின் மூலம் கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் அமைத்து அனைத்து கால்நடைகளுக்கும் மருத்துவ பரிசோதனை செய்திட வேண்டுமென அறிவுறுத்தினார்.
பின்னர் ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளில் மழை நீரை அகற்றுவதற்கான பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டதுடன்,வடிகால் வாய்க்கால் பகுதிகளை சீரமைத்து தொடர்ந்து கண்காணித்திடவும் அலுவலர்களுக்கு மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் மற்றும் தமிழ்நாடு கடல்சார் வாரியம் துணைத்தலைவர்,தலைமைச்செயல் அலுவலர் டாக்டர்.மா.வள்ளலார் அறிவுறுத்தினார்.இந்த ஆய்வின்போது,மாவட்ட வருவாய் அலுவலர் இரா.கோவிந்தராஜலு,வேளாண் இணை இயக்குநர் பாஸ்கர மணியன், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் இராதாகிருஷ்ணன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் ஆறுமுகம் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.