ராமநாதபுரம்,நவ.23:-
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ராமநாதபுரம் மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஹனிஷ் சாப்ரா தலைமையில்,மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கம்,திருத்தம் குறித்து மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ராமநாதபுரம் மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் திரு.ஹனிஷ் சாப்ரா,மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்ததுடன், மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள்,வாக்குச்சாவடி மைய அலுவலர்கள் களப்பணியில் ஈடுபட்டு படிவங்களை உறுதி செய்ய அறிவுறுத்தினார்.
மேலும் புதிய வாக்காளர்கள் சேர்ப்புகேற்ப கல்லூரிகளில் விழிப்புணர்வு மேற்கொள்ள வேண்டும்.18 வயது பூர்த்தியடைந்தவர்கள் அனைவரும் வாக்காளர்களாக பதிவு செய்ய அறிவுறுத்தவேண்டும். அதேபோல் பெயர் நீக்கம் குறித்து வரக்கூடிய விண்ணப்பத்திற்கு இ.ஆர்.ஓ, ஏ.ஆர்.ஒ மற்றும் பி.எல்.ஓ ஆகிய அலுவலர்கள் களப்பணியில் ஈடுபட்டு உறுதி செய்த பின்னர் நீக்கம் செய்ய வேண்டும். அதேபோல் முகவரி மாற்றம், இரு பதிவுகள் திருத்தம் குறித்த விண்ணப்பங்களுக்கும் ஆய்வு செய்து, உறுதி செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும். வாக்காளர் பட்டியல் வெளியிடும் போதும் அனைத்தும் சரியான முறையில் இருந்திட வேண்டும்.
தற்பொழுது புதிய வாக்காளர் பெயர் சேர்த்தல்,திருத்தம்,நீக்கும் குறித்த படிவங்கள் பெரும் வகையில் நடப்பு மாதத்தில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை தோறும் சிறப்பு முகாம்கள் நடைபெற்றது. இம்முகாமில் பி.எல்.ஓ அலுவலர்கள் பணிகள் மேற்கொண்டு வருகிறார்கள்.அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களும் வாக்காளர் பட்டியல் தொடர்பான விண்ணப்பங்களை வழங்கி பதிவு செய்ய உதவிடலாம்.பொதுமக்களிடமிருந்து பெறக்கூடிய மனுக்களை பெற்று தேர்தல் ஆணையம் வழிகாட்டுதலின்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ராமநாதபுரம் மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஹனிஷ் சாப்ரா தெரிவித்தார்.
தொடர்ந்து இராமநாதபுரம் மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஹனிஷ் சாப்ரா நேஷனல் மெட்ரிக் பள்ளி,ஆல்வின் மெட்ரிக் பள்ளி மற்றும் வள்ளல் பாரி நகராட்சி மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் நடைபெற்று வந்த வாக்காளர் பெயர் சேர்ப்பு மற்றும் சுருக்கத் திருத்தத்திற்கான சிறப்பு முகாமை பார்வையிட்டதுடன்,ஓம் சக்தி நகரில் புதிதாக வாக்காளர் சேர்ப்புக்கான விண்ணப்பம் வழங்கியவரின் முகவரிக்கு சென்று வாக்காளர் பட்டியல் பார்வையாளர் விசாரணை செய்து உறுதிப்படுத்தினார்.