பனைக்குளம்,ஆக.6:-
ராமநாதபுரம் மாவட்டம், சத்திரக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று (06.08.2024) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் திடீர் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது,அமைச்சர் மருத்துவமனையில் உள்நோயாளிகள் பிரிவு,வெளி நோயாளிகள் பிரிவு, மருத்துவ பரிசோதனை கூடம் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டு, மருத்துவர்களிடம் நாள்தோறும் மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தவுடன், மக்களை தேடி மருத்துவம்,இன்னுயிர் காப்போம் திட்டம் போன்ற திட்டங்களில் பயன்பெற்ற பயனாளிகள் குறித்து கேட்டறிந்தவுடன்,பயனாளிகளின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இத்திட்டத்தின் பயன்கள் குறித்து கேட்டறிந்தார்.பின்னர் மருத்துவர்கள், பணியாளர்களுடன் அமர்ந்து தேனீர் அருந்தியதுடன் அவர்களிடம் கலந்துரையாடி,அவர்களின் தேவைகள் குறித்து கேட்டறிந்ததுடன், மருத்துவர்கள்,பணியாளர்கள் சிறப்பாக செயல்பட்டு அரசின் திட்டங்களை மக்களுக்கு முழுமையாக கொண்டு செல்வதுடன்,மருத்துவ சேவைகளை சிறப்பாக வழங்கிட வேண்டுமென அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.
பின்னர் பரமக்குடி தலைமை மருத்துவமனைக்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன், புதிதாக கட்டப்பட்டு வரும் அரசு தலைமை மருத்துவமனை கட்டுமான பணியினை விரைந்து முடித்திடவும் அலுவலர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வில் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன்,துணை இயக்குநர் மரு.இந்திரா,மருத்துவ அலுவலர் மரு.கார்த்திகேயன்,போகலூர் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் சத்யா குணசேகரன்,மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் திசைவீரன் மற்றும் அரசு அலுவலர்கள்,மருத்துவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.