பாரிஸ்: பிரான்சில் நடைபெற்று வரும் ஒலிம்பிக்போட்டியில் தப்பும் தவறுமாக அறிவிப்பு செய்துவருவது தொடர்கதையாகி வருவது ரசிகர்களிடையே குழப்பத்தையும் நகைச்சுவையையும் ஏற்படுத்தி உள்ளது.
பிரான்ஸ் நாட்டில் ஒலிம்பிக்போட்டி துவங்கி நடைபெற்று வருகிறது. போட்டிகள் துவங்கி மூன்று நாட்களாகிறது. போட்டியின் முதல்நாளில் அனைத்து நாடுகளையும் அணிவகுத்து வரச்செய்து அறிமுகப்படுத்தப்படுவது வழக்கமான ஒன்று.
அப்படி தான் தென் கொரிய நாட்டு வீரர்கள் அணிவகுத்து வந்தனர். அப்போது அறிவிப்பாளர்கள் வடகொரியா அணி வீரர்கள் வருகின்றனர் என அறிவித்தனர். இதனால் பெரும் பரபரப்பு உருவானது. சுதாரித்து கொண்ட அறிவிப்பாளர்கள் தென்கொரியா என அறிமுகப்படுத்தினர்.
இரண்டாவது சம்பவமாக கூடைப்பந்து போட்டியின் போது நடந்துள்ளது. கூடைப்பந்து போட்டியில் தெற்கு சூடான்அணியும், போர்ட்டோ ரிக்கோ அணியும் மோதின .போட்டியில் போர்ட்டோ ரிக்கோவை சூடான் அணி 90-79 என்ற கணக்கில் வென்றது. இதனையடுத்து சூடான் அணியை பாராட்டும் விதமாக தேசிய கீதம் இசைக்கப்பட்டது. இசையை கேட்ட சூடான் ரசிகர்களும் , வீரர்களும் குழப்பம் அடைந்தனர். காரணம் இந்த இசை நம்முடையது அல்லவே என சிந்தித்து தெளிவதற்குள்ளாக சரியான தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
இது குறித்து சூடான் ரசிகர் ஒருவர் கூறுகையில் 2011-ல் சுதந்திர நாடாக சூடான் உருவானது. மக்கள் இன்னும் எங்களை மதிக்கவில்லை, நாம் இன்னும் நம் மரியாதையைப் பெற வேண்டும். எனவே, எங்களால் முடிந்ததை உலகுக்கு நாம் தொடர்ந்து காட்ட வேண்டும் என்று உணர்கிறேன் என கூறினார்.