அமெரிக்காவின் அடுத்த அதிபர் டிரம்ப் பெண் ஜோதிடர் கணிப்பால் பரபரப்பு

வாஷிங்டன்: ”அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் டிரம்ப் தான் வெற்றி பெறுவார்,” என, பிரபலமான பெண் ஜோதிடர் வெளியிட்டுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பரில் நடக்கவுள்ளது. இதில், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் களத்தில் இறங்கினார்.

அவரது உடல்நிலை அதற்கு ஒத்துழைக்கவில்லை. டிரம்புடன் நடந்த நேரடி விவாத நிகழ்ச்சியிலும் அவர் சொதப்பினார்.

இதையடுத்து, அதிபர் தேர்தல் போட்டியிலிருந்து விலகும்படி, அவரது கட்சியினர் ஜோ பைடனுக்கு நெருக்கடி கொடுத்தனர். இதனால் அவர் போட்டியிலிருந்து விலகினார்.

ஜனநாயக கட்சி சார்பில், தற்போதைய துணை அதிபரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த பிரபலமான ஜோதிடர் எமி டிரிப், 40, தேர்தல் தொடர்பான கணிப்பை வெளியிட்டுள்ளார். இவர், 2020ம் ஆண்டிலேயே, ‘உடல்நிலை காரணமாக ஜோ பைடன், அதிபர் வேட்பாளர் போட்டியிலிருந்து விலகி விடுவார். கமலா ஹாரிஸ் தான், ஜனநாயக கட்சியின் வேட்பாளராவார்’ என, கணித்திருந்தார். அவர் கூறியபடியே தற்போது நடந்துள்ளது.

இந்நிலையில், ‘தற்போதைய அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் தான் வெற்றி பெறுவார்’ என, அவர் கணித்துள்ளார். இது தொடர்பான தகவலை, அமெரிக்காவின் முன்னணி செய்தி பத்திரிகைகள் வெளியிட்டுள்ளன. இது, அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையே, மினோசேடாவில் நடந்த பிரசார கூட்டத்தில் டிரம்ப் நேற்று பேசியதாவது:

நம் நாட்டின் எல்லையை அகதிகளுக்கும், பயங்கரவாதிகளுக்கும் திறந்து விட்டவர் கமலா ஹாரிஸ். அவர் அதிபரானால், எல்லையை நிரந்தரமாகத் திறந்து விட்டுவிடுவார். ஆனால், அதற்கு வாய்ப்பு ஏற்படுவதை மக்கள் விரும்ப மாட்டார்கள்.

யார் அதிபராக வர வேண்டும் என்பதைவிட யார் வரக்கூடாது என்பதே முக்கியம்.

இஸ்ரேலுக்கு எதிராகப் போரிடும் ஹமாஸ் பயங்கரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ள மக்களை, நம் நாட்டுக்குள் வருவதற்கு அனுமதித்து விடுவர்.

கமலா ஹாரிஸ் அதிபரானால், அதைவிட இந்த நாட்டுக்கு எந்தக் கேடும் இல்லை. நாட்டில் குற்றங்கள் அதிகரிக்கும், பயங்கரவாதிகளுக்கு அங்கீகாரம் கிடைக்கும், குழப்பங்கள் உருவாகும். நான்கு ஆண்டு இறுதிக்குள், அமெரிக்காவுக்கு சாவு ஏற்பட்டு விடும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பயத்தில் பேசுகிறார்!

டொனால்டு டிரம்ப் தன் பிரசாரக் கூட்டங்களில் என்னைப் பற்றிக் கடுமையாக விமர்சித்து வருகிறார். இதில் இருந்தே, அவர் என்னைப் பார்த்துப் பயப்படுகிறார்; தோல்வி பயத்தில் பேசுகிறார் என்பது தெரிகிறது.

கமலா ஹாரிஸ், அமெரிக்க துணை அதிபர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *