பெங்களூரு, : இம்முறை மத்திய பட்ஜெட்டில், 15,300 கோடி ரூபாய் நிதி கர்நாடகாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், மாநில அரசு பொய் கூறுகிறது. என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
மத்திய பட்ஜெட்டில் கர்நாடகாவுக்கு ஒரு ரூபாய் கூட ஒதுக்கவில்லை என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் உட்பட காங்கிரஸ் தலைவர்கள் குற்றஞ்சாட்டினர். சொம்பு ஏந்தி கொண்டு பெங்களூரில் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில், பெங்களூரு வந்திருந்த மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று கூறியதாவது:
விண்வெளி துறைக்கு பெரிய தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. பெங்களூரில் தான் ‘இஸ்ரோ’ தலைமையகம் உள்ளது. விண்வெளி ஆராய்ச்சிகள் இங்கு தான் அதிகமாக நடக்கிறது.
நகர்ப்புற மேம்பாட்டிலும் பெங்களூரு வளர்ச்சிக்கு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
வீடுகள் கட்டுவது, மகளிர் மேம்பாடு, பணிக்கு செல்லும் மகளிருக்கு ஹாஸ்டல்கள், சிறு குறு நிறுவனங்களுக்கு நிதியுதவி இப்படி ஏராளமான திட்டங்கள் கர்நாடகாவுக்கும் உள்ளன.
தொழில் துறை பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில், பீன்யாவில் அலுவலகம் திறக்கப்படும். இந்த முறை பட்ஜெட், நடுத்தர மக்களுக்கானது. பணிக்கு செல்லும் ஊழியர்களுக்கு வருமான வரியில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில், 2004 – 2014 வரை, கர்நாடகாவுக்கு 81,791 கோடி ரூபாய் நிதியை மட்டுமே மத்திய அரசு வழங்கியது. ஆனால், 2014 – 2024 வரை தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி காலத்தில், 2,95,818 கோடி ரூபாய் நிதியை வழங்கினோம்.
கடந்த 2024 – 25 வரை கர்நாடகாவுக்கு 45,485 கோடி ரூபாய் வரி பங்கு வழங்கப்பட்டுள்ளது. இம்முறை மத்திய பட்ஜெட்டிலும், 15,300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது தவிர, ஆண்டுதோறும் நிவாரண நிதி வழங்கி வருகின்றோம்.
ஆனால், கர்நாடகாவுக்கு நிதி ஒதுக்கவில்லை என்று மாநில அரசு மட்டும், பொய் கூறி வருகின்றனர். இதை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.