நெதர்லாந்தில் உள்ள அலுவலகம் ஒன்றில் இந்திய உணவு வழங்கப்பட்ட வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
இந்தியாவைச் சேர்ந்தவர்கள் உயர்படிப்பு அல்லது வேலைக்காக வெளிநாடுகளுக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஒவ்வொரு இடங்களிலும் ஒவ்வொரு விதமான உணவுப்பழக்கங்கள் உண்டு. அவ்வாறு வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் அந்த இடத்தில் உள்ள உணவு பழக்கத்திற்கு தங்களை மாற்றிக்கொள்வதில் பெரிதும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
அங்கு கிடைக்கும் உணவுகளின் சுவைகள் வித்தியாசமாகவும், நன்றாகவும் இருந்தாலும் கூட அவ்வப்போது நமது ஊர் உணவுக்காக ஏங்குவது உண்டு. அவ்வாறு நாம் செல்லும் வெளிநாடுகளில் நம் நாட்டு உணவுகள் கிடைத்தால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும். அது போன்ற சம்பவம் ஒன்றுதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது நெதர்லாந்தில் உள்ள அலுவலகம் ஒன்றில் இந்திய உணவுகள் வழங்கப்பட்ட வீடியோ ஒன்றை இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவில் ரொட்டி, சட்னி, பருப்பு குடைமிளகாய் கூட்டு, பீன்ஸ் போன்ற உணவுகள் உள்ளதை பார்க்க முடிகிறது. பதிமா சட்னி என ஒன்று உள்ளது. அது எழுத்துப் பிழையாக இருக்கலாம். இன்ஸ்டாகிராமில் வீடியோவைப் பகிர்ந்த அவர், “நெதர்லாந்தில் உள்ள எனது அலுவலகத்தில் இன்று வழங்கப்படும் ‘இந்திய உணவு’ சற்று கேள்விக்குறியாகத் தெரிகிறது.” “பதிமா சட்னி” எதனால் ஆனது என்பதை நான் நிச்சயமாக அறிய விரும்பவில்லை,” என்று சிரித்த முக எமோஜியுடன் கூறினார்.